நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வந்தடைந்தனர்.


நாடே எதிர்நோக்கும் நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பில் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க இந்த முறையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதே சமயம் பா.ஜ.க ஆட்சி அமைக்கக்கூடாது என எதிர்க்கட்சிகள் தரப்பில் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கட்சிகள் தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது ஒரு பக்கம் இருந்தாலும், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வந்தடைந்தனர். இந்திய தேர்தல் ஆணையத்தின், துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில், தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ மற்றும் தேர்தல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். பின்னர், நாளை காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலி வாயிலாக தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.


மக்களவைத் தேர்தல் 2024 க்கான அதிகாரப்பூர்வ தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை. கடந்த மாத தொடக்கத்தில், டெல்லியின் தலைமைத் தேர்தல் அதிகாரி, மக்களவைத் தேர்தலுக்கான உத்தேச தேதி ஏப்ரல் 16 என தகவல் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் பணிகளுக்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வதற்காக இந்த தேதி அறிவிக்கப்பட்டதாக பின்னர் விளக்கமளிக்கப்பட்டது.


2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்கள் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது.  ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி முடிவடைந்து, மே 23ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜன்நாயக கூட்டணி 353 இடங்களைக் கைப்பற்றியது, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 91 இடங்களை வென்றது, இதர கட்சிகள் 98 இடங்கள் கைப்பற்றியது. ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது, இதில் தகுதி பெற்ற 900 மில்லியன் மக்களில் 67 சதவீதம் பேர் 542 மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.