ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருடன் சிறப்பு உதவி மையத்தில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் நிலைமையை கேட்டறிந்தார்.
இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பயங்கர விபத்துக்குள்ளாகி 230-க்கும் மேற்பட்டோர் இறந்து இருப்பதாக செய்தி வந்திருக்கிறது ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்து குறித்து கேள்விப்பட்டதும் இரவே ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சருடன் தொடர்பு கொண்டு பேசினேன். அங்கு மீட்பு பணிகள் ஏதேனும் தேவைப்பட்டால் தமிழகத்தில் தயாரக இருப்பதாக தெரிவித்தேன். தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், வருவாய் துறை செயலாளர், போக்குவரத்து துறை செயலாளர் உள்ளிட்டோர் ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். காவல்துறை அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள் என பலர் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
விபத்து குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்தேன். விபத்தில் சிக்கி தமிழகம் வந்து சேரக்கூடியவர்களை அழைத்து வர சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மருத்துவ வசதிகளும் செய்ய தயார் செய்யப்பட்டு வருகிறது. காணொளி வாயிலாக ஒடிசா மாநில தலைமைச்செயலாளருடன் தற்போது கேட்டறிந்தோம். ஒடிசாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளை செய்யும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலியை செலுத்தினோம். இன்று ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இறந்தவரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடியின் நிவாரண நிதியிலிருந்து உதவித்தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். ரயில் விபத்து காரணமாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. குறைந்தது நான்கு அல்லது ஐந்து மணி நேரமாவது இன்னும் மீட்பு பணிகள் நடைபெறும் என்றார்.” என பேசியுள்ளார்.