Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள முதற்கட்ட தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இந்த ரயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தது. இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அடுத்த சிறிது நேரத்தில் எதிர் தண்டவாளத்தில் வந்துக் கொண்டிருந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து அதே பாதையில் வந்த சரக்கு ரயிலும் விபத்துக்குள்ளான ரயில் மீது மோதியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் தடம் புரண்ட பெட்டிகளில் சிக்கியவர்கள் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் விடிய விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் இதுவரை 280 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடந்து வரும் மீட்பு பணிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் நேரில் பார்வையிட்டனர். மேலும் சென்னையில் விபத்தில் சிக்கிய பயணித்த பயணிகள் குறித்த தகவல்களை அறிய கட்டுப்பாட்டு அறையும், அவசர கால உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரயில்வே அமைச்சகம், மத்திய அரசு, மாநில அரசுகள் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரக் மற்றும் சோரோ மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விபத்து நடந்த இடத்தில் இருந்து பிற பயணிகளை தமிழ்நாட்டுக்கு அழைத்து வர சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து ஹவுரா செல்லும் ரயில்கள் புவனேஸ்வர் வரை மட்டுமே செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய 40க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இதனிடையே சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் நடைபெறும் பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என அவர் அறிவித்தார். தொடர்ந்து அமைச்சர்கள் உதயநிதி, எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையிலான குழுவினர் ஒடிசா புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் ரயில் விபத்தில் இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என வருவாய்துறை செயலர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.