மகளிருக்கான இலவச பேருந்துப் பயணத்தை 'ஓசி பஸ்' என்று கூறியது சர்ச்சையான நிலையில், விளையாட்டாகப் பேசியதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 


அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "உங்கள் குடும்ப அட்டைக்கு முதல்வர் ரூ.4 ஆயிரம் கொடுத்தாரா? இல்லையா? வாங்கினீர்கள்தானே? வாயைத் திறந்து சொல்லுங்கள். இப்போது பேருந்தில் எப்படிச் செல்கிறீர்கள்? இங்கிருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றாலோ, வேறு எங்கு சென்றாலும் ஓசி பஸ்ஸில்தானே போகிறீர்கள்" என்று தெரிவித்திருந்தார்.


தலைவர்கள், மக்கள் கண்டனம் 


அமைச்சர் பொன்முடியின் இலவசப் பேருந்து பயணம் குறித்த பேச்சுக்கு, அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் சமூக வலைதளங்களில்  எதிர்வினை ஆற்றினர். பொதுமக்களிடம் இதுகுறித்து ஊடகங்கள் எடுத்த கருத்துக் கேட்பும் வைரல் ஆனது. 


அண்மையில் கோயம்புத்தூரில் ஒரு மூதாட்டி, " ஓசி பயணம் வேண்டாம், டிக்கெட் கொடுங்க" என்று பேருந்தில் முரண்டு பிடித்ததும் பேசுபொருள் ஆனது.






இந்நிலையில்,  இதுகுறித்து அமைச்சர் பொன்முடி இன்று விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், விளையாட்டுத்தனமாக, சும்மா பேசியதைப் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். நான் எந்த தவறான எண்ணத்திலும் பேசவில்லை" என்று தெரிவித்துள்ளார். 


*


2021ல் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மாநகர மற்றும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற தங்களின் தேர்தல் பரப்புரை வாக்குறுதிகளில் ஒன்றினை நடைமுறைப்படுத்தியது. இதன்மூலம் பல பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். 


ஆனால் இந்த திட்டம் சாதாரண நகரப் பேருந்துகளில்  பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்  என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சரியாக அறியாமல் டீலக்ஸ், எலக்ட்ரிக் போர்டு மற்றும்  எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ஏறி பெண்கள் பணம் செலவழித்து பயணம் செய்ய வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பெண்கள் இலவசமாக பயணிக்கக் கூடிய பேருந்துகள் பிங்க் நிறத்தில் மாற்றப்பட்டன. 


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, கடந்த ஆண்டு 40 சதவீதமாக இருந்த பெண் பயணிகளின் எண்ணிக்கை தற்போது 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், "கடந்த ஓராண்டில் 132 கோடிக்கும் அதிகமான பெண்கள் திமுக அரசின் இலவச பயணத் திட்டத்தால் பயன் அடைந்துள்ளனர்.


இந்த திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்தும் வகையில் 1,600 கோடி ரூபாய் அளவிற்கு மானியமாக தமிழக அரசால்  ஒதுக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசின் இந்த இலவச பயணத் திட்டத்தால் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் மாதந்தோறும் குறைந்தது ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க உதவிகரமாக இருக்கிறது. இந்த சேமிப்பு தொகை அவர்களின் குடும்ப செலவுகளும் பெரிதும் உதவியாக இருக்கும்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.