''பிரதமர் எனக்கு அழுத்தம் கொடுத்தார்..'' டெல்லியில் நடந்ததை அப்படியே கூறிய ஓபிஎஸ்!


அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் பூதகரமாக வெடித்து வரும் சூழலில் சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்பொழுது பேசிய அவர், துணை முதல்வர் பதவி குறித்து குறிப்பிட்டு பேசினார். அதில், 


''இந்திய அரசியல் சட்டத்தின்படி துணை முதல்வருக்கு எந்த வித அதிகாரமும் இல்லை. அதனால் நான் வேண்டாமென்று கூறினேன். அப்போது டெல்லிக்கு என்னை அழைத்த பிரதமர் மோடி துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறினார். அவரிடத்திலும் நான் மறுத்தேன். ஆனால் அவர் கொடுத்த அழுத்தத்தால் அந்த பதவியை நான் ஏற்றுக்கொண்டேன் . அதிமுகவின் என்னை ஓரம் கட்டமுடியாது.  எந்த வித அதிகார ஆசையும் நான் கொண்டவனில்லை. 


தொண்டர்களிடத்தில் இருந்து என்னை பிரிக்க முடியாது. தொண்டர்களை காப்பாற்றவே நான் பொறுப்பில் இருக்கிறேன். முதல்வராக இருந்தபோதும், ஒருங்கிணைப்பாளராக நான் இருக்கும் இந்நேரத்திலும் ஒரு தொண்டனாகவே இருக்கிறேன். ஒற்றைத்தலைமை  என்றபேச்சு ஏன் உருவானது என்பதே தெரியவில்லை. இன்றைய சூழலில் அது தேவையில்லை. இரட்டைத்தலைமை நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது. நானோ, எடப்பாடி பழனிசாமியோ ஒற்றைத்தலைமை குறித்து பேசியதில்லை.பொதுசெயலாளர் பதவிக்கு வேறொருவரை கொண்டு வருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்'' என்றார் 




ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பொன்னையன் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில், ஒற்றைத்தலைமை குறித்த கேள்வியே தேவையற்ற ஒன்று. அந்த முடிவை பொதுக்குழு முடிவு செய்யும். திட்டமிட்டப்படி பொதுக்குழு நடக்கும். பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை குறித்து பேச வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு ஜோசியம் சொல்ல முடியாது என்று பதிலளித்தார் பொன்னையன்.


மேலும் பேசிய அவர்,  இங்கு யாரும் தனித்தனியாக செயல்படவில்லை.  ஓபிஎஸும், இபிஎஸும் கண்ணும் இமையும் போல, நகமும் சதையும் போல ஒன்றாகவே உள்ளனர்.  கூட்டத்தில் இருந்து யாரும் கோபமாக வெளியேறவில்லை. அதெல்லாம் உங்கள் கற்பனை. சிவி சண்முகம் திருச்சி செல்லவேண்டுமென்பதால் கிளம்பினார். ஜெயக்குமார் ஒரு மீட்டிங்கில் இருந்து வந்தார். மீண்டும் கிளம்பி சென்றார். இரட்டைத்தலைமை தொடருமா என்பதே தேவையற்ற கேள்வி என்றார்.


ஒற்றைத் தலைமை இப்போது சாத்தியமா ? – அதிமுக விதிகள் சொல்வது என்ன ? 


அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட உட்கட்சி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அதற்கான ஒப்புதலை வரும் 23 ஆம் தேதி வாங்க வேண்டியிருக்கிறது. அதோடு, ஒற்றைத் தலைமை உருவாக்க வேண்டுமென்றால், ஒபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்துவிட்டு, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் மட்டுமே ஒற்றைத் தலைமை உருவாக்கம் என்பது சாத்தியப்படும் 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண