இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு ஓ பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும். படிவம் ஏ மற்றும் படிவம் பி யில் கையெழுத்திட அதிகாரம் வழங்க வேண்டும். 2025 டிசம்பர் வரை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக தொடர தனக்கு தகுதி இருப்பதாக தெரிவித்துள்ளார்.


தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்:


இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், “ பன்னீர்செல்வமும், பழனிசாமியும் முதன்மை உறுப்பினர்களால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சி மற்றும் சட்டப்பூர்வப் பணிகளை ஆற்றி வருகின்றனர். இதற்கிடையில், 28/6/20222 அன்று, கே.பழனிசாமி தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவர் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அனுப்பினார். தேர்தல் ஆணையத்தின் பதிவுகளில், திருத்தப்பட்ட துணைச் சட்டங்கள் அதிகாரப்பூர்வ பதிவுகள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.


இதற்கிடையில் கே. பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி 11/7/2022 இல் சட்டவிரோத பொதுக்குழு கூட்டத்தை கூட்டி பல்வேறு சட்ட விரோத தீர்மானங்களை நிறைவேற்றி அதன் விளைவாக அவரே பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சிவில் வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிலுவையில் உள்ளன.  அந்தத் தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக சிவில் நீதிமன்றத்தால் இன்று வரை இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது வரை தேர்தல் ஆணையத்தாலோ சிவில் நீதிமன்றத்தாலோ எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வானது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை.


ஏ மற்றும் பி படிவம்:


தற்போதைய நிலவரப்படி, தேர்தல் ஆணையத்தின்  அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி ஒருங்கிணைப்பாளர் என்பது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பதவியாகும், பழனிசாமியும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  எனவே, 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், எங்களின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்காத நிலையில், இரட்டை இலை சின்னம் இழக்க நேரிடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது.


எனவே தேர்தல் ஆணையம் இந்த மாதிரியான சூழ்நிலையில் உடனடியாக தலையிட்டு, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அனைத்து பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு, வரும் தேர்தலில் திறம்பட பங்கேற்கும் வகையில், நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திட அனுமதியளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.