5ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். பொங்கலுக்கு முன்பு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதனால், செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளார்களா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2015ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போட்டித்தேர்வு நடத்தித்தான் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
8,322 செவிலியர்கள் போராட்டம்
ஆனால், அவர்களில் 6 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 8,322 செவிலியர்கள் இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை. இதை எதிர்த்து பல ஆண்டுகளாக அவர்கள் போராடி வருகின்றனர்.
அதேபோல கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. எனினும் இதுவரை இந்த அறிவிப்பு நிறைவேற்றப்படவில்லை.
5ஆம் நாளாகப் போராட்டம் சுமார் 10 ஆண்டுகளாக ஒப்பந்த செவிலியர்களாக பணியாற்றி வரும் அவர்கள் பணி நிரந்தரம் கோரி கடந்த 18ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை, தஞ்சை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டத் தலைநகரங்களில் 5ஆம் நாளாக ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். செவிலியர்கள் உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ‘’புதிதாக 723 காலி இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. கொரோனா காலத்தில் பணியாற்றிய 723 செவிலியர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கலுக்கு முன்பு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். அடுத்தடுத்து காலி இடங்கள் தொடர்ந்து உருவாக்கப்படும்.
புதிதாக செவிலியர் கல்லூரி உருவாக்கப்படும். அடுத்தடுத்த கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.