நாடு முழுவதும் இன்று உலக செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று மனிதகுலத்துக்கு பெரும் சவாலை விடுத்து மருத்துவத் துறையினரை இரவு பகல் பாராமல் பல்வேறு உயிர்களை காக்க தங்கள் உயிர்களை தியாகம் செய்து சேவையாற்றி வருகின்றனர். அவர்களின் சேவையை போற்றும் விதமாக உலக நாடுகள் அனைத்திலும் மே 12-ஆம் நாளன்று உலக செவிலியர் தினம் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதும் செவிலியர் தினம் கொண்டாடப்படும் வேளையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விபத்தில் ஒரு செவிலியர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வடகால் துணை சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிபவர் செவிலியர் உஷா. இவர் இன்று குளத்திங்கநல்லூருக்கு பணி நிமித்தமாக மாதாந்திர தடுப்பூசி போடுவதற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். 



விபத்து ஏற்படுத்திய வாகனம்


 


அப்பொழுது  அவருக்குப் பின்னே வந்த டிராக்டர்  அவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி அவர் மீது ஏறி இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் செவிலியர் உஷா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.  தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு சென்ற புதுப்பட்டினம் போலீசார் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக  சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


மேலும் இது தொடர்பாக புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் டிராக்டரை 15 வயது சிறுவன் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது விசாரணையில்  தெரியவந்துள்ளது. உலக செவிலியர் தினத்தின் பணிக்கு சென்ற செவிலியர் ஒருவர் விபத்தில் பலியான சம்பவம் அனைவரது மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.