”இரண்டு சனியன்களை கையில் எடுத்துக்கொண்டு சனிக்கிழமைகளில் கிளம்பிவிடுகிறார் என விஜயை சாட நினைத்து அண்ணா மற்றும் எம்ஜிஆர் குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு இபிஎஸ் மற்றும் டி டிவி தினகரன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சீமான் சர்ச்சை பேச்சு:
சென்னையில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான்,”விஜய் தற்போது பிரச்சாரம் என்ற பெயரில் உப்புமா தான் கிண்டி கொண்டு இருக்கிறார். திமுகவிடம் 2 இட்லி, அதிமுகவிடம் 2 தோசையை எடுத்து பிச்சுப்போட்டு உப்புமாவை கிண்டிருக்கிறார். இங்கே அண்ணாவை வைத்திருக்கிறார், அங்கு எம்.ஜி.ரை வைத்திருக்கிறார். இதில் என்ன மாற்றம் இருக்கிறது?. இது ஒரு சனியன், அது ஒரு சனியன் இரண்டு சனியன்களை எடுத்து போட்டு சட்டையை போட்டிருக்கிறார். சனிக்கிழமை, சனிக்கிழமை கிளம்பிவிடுகிறார்" என்று விமர்சித்தது சர்ச்சையை ஏற்ப்படுத்தி இருந்தது.
இபிஎஸ் கண்டனம்:
சீமானின் இந்த கருத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் மேடைகளில் சமத்துவம் கண்ட, அனைவருக்கும் அனைத்தும் வழங்கும் சமதர்ம திராவிட அரசியலை தமிழ்நாட்டின் நிர்வாக அரசியலாகக் கட்டமைத்த பேரறிஞர் அண்ணா அவர்களையும், அண்ணா_வழி_திராவிடம் எனும் உயரிய நோக்கில் அதிமுகவை நிறுவி, உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பிற்குரிய தலைவராக, மேதகு பிரபாகரன் அவர்களுக்கும் தலைவராக விளங்கிய நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களையும், இழிசொல் உரைத்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு கடும் கண்டனம்.
மறைந்த தலைவர்களின் புகழை இழிவு படுத்தும் நோக்கில் வன்மத்தோடு பேசுவது துளியும் அரசியல் நாகரிகமற்ற செயல். தமிழர்களுக்கே உரித்தான அறத்தை சீமான் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் கொள்கையை, வளர்ச்சியை செதுக்கிய ஒப்பாரும் மிக்காரும் அற்ற நம் தலைவர்கள் பற்றி அவதூறாகப் பேசியதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று தெரிவித்திருந்தார்
அருவெறுக்கத்தக்க பேச்சு - டிடிவி கண்டம்:
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் சீமானுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார், அவர் வெளியிட்டுள்ள பதிவில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் குறித்தான திரு சீமான் அவர்களின் அருவெறுக்கத்தக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – மறைந்த தலைவர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலான பேச்சை இனியும் தொடர்ந்தால் அதற்கான எதிர்வினைகள் மிகக் கடுமையாக இருக்கும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களாக, மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு நிர்வாகம் எப்படி இயங்க வேண்டும் என்ற அடிப்படை இலக்கணத்தை வகுத்துக் கொடுத்த இருபெரும் ஆளுமைகளான பேரறிஞர் பெருந்தகை அண்ணா மற்றும் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் குறித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழர் வாழ வேண்டும், தமிழர் பண்பாடு சிறக்க வேண்டும் என்ற அரும்பெரும் குறிக்கோள் கொண்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் குறித்தும், ஏழைகள் ஏழைகளாகவே இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் குறித்தும் திரு சீமான் அவர்களின் நாகரீகமற்ற பேச்சு தமிழக மக்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறிவார்ந்த கொள்கையின் மூலம் புதிய அரசியல் கோட்பாட்டை உருவாக்கி தமிழகத்தின் தன்னிகரற்ற ஆளுமைகளாக திகழ்ந்த இருபெரும் தலைவர்களும் இயற்கையோடு இயற்கையாக கலந்து விட்டாலும், அவர்கள் நிகழ்த்திய சாதனைகளும், அமல்படுத்திய திட்டங்களும் தமிழக மக்களின் ஆழ்மனதில் நீக்கமற நிறைந்து இன்றளவும் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.
எனவே, யார் மீதோ கொண்ட வன்மத்தை வெளிப்படுத்துவதாக எண்ணி, மறைந்த மாபெரும் தலைவர்கள் மீது நாகரீகமற்ற பேச்சுக்களின் மூலம் அரசியலில் தன் இருப்பைக் காட்டிக் கொள்ள திரு சீமான் அவர்கள் இனியும் முயலும் பட்சத்தில் அதற்கான எதிர்வினை தமிழக மக்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் வரும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜயை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு அண்ணா மற்றும் எம்ஜிஆர் விமர்சித்தது தற்போது சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது.