விஜயை ஏன் கைது செய்யவில்லை? - கரூரில் 41 பேர் உயிரிழந்த அதே இடத்தில் சாட்டை துரைமுருகன் கேட்ட கேள்வி
கரூரில் 41 பேர் உயிரிழந்த அதே இடத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் – சாட்டை துரைமுருகன் தவெக மீது கடும் விமர்சனம்.

கரூரில் 41 பேர் உயிரிழந்த அதே இடத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் – சாட்டை துரைமுருகன் தவெக மீது கடும் விமர்சனம்.
கரூரில் 41 பேர் உயிரிழந்த அந்த துயர சம்பவத்திற்கு காரணமாக இருந்த விஜயை கைது செய்யாத காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம் என நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், மாநில ஒருங்கிணைப்பாளர் இளைஞர் பாசறை இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
41 பேர் உயிரிழந்த அதே இடத்தில் பொதுக்கூட்டம்
இதில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரை கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்த அதே இடத்தில், இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையா அறிமுக விழா நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

விஜயை ஏன் கைது செய்யவில்லை?
பொதுக் கூட்டத்தில் பேசிய சாட்டை திருமுருகன், “நாங்கள் தவெகவை விமர்சித்தால் திமுகவினர் பணம் கொடுக்கிறார்கள் என்று கூறுகின்றனர். அப்படியானால் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தவெகவை விமர்சித்து பேசும் போது அவர்களுக்கும் திமுக பணம் தருகிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், “41 பேர் உயிரிழந்த அந்த துயர சம்பவத்திற்கு காரணமாக இருந்த விஜயை கைது செய்யாத காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம். அந்த சம்பவத்தில் காவல்துறையினர் உரிய முறையில் செயல்படவில்லை என்றால், உயிரிழப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும். அப்போது முதலுதவி வழங்கிய காவலர்களுக்கு முதலில் சல்யூட்” எனத் தெரிவித்தார்.
இன்று தவெக தரப்பினர் காவல்துறையை குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் அவர் கூறினார். “நாம் தமிழர் கட்சிக்கும் திமுகவிற்கும் தெளிவான கொள்கை உள்ளது. ஆனால் தவெகவிற்கு என்ன கொள்கை இருக்கிறது?” என அவர் விமர்சனம் செய்தார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூட இவ்வளவு கொள்ளை நடந்ததில்லை
மேலும், வெண்ணமலை கோவில் இடப்பிரச்சினை குறித்து பேசிய அவர், “முருகன் கோவிலை கட்டியது யார்? இங்குள்ள பொதுமக்கள்தான். அவர்களுக்கு அந்த இடத்தில் வாழ உரிமை இல்லையா? இடத்தை வாங்கி கொடுத்து விட்டால் பாலமுருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் சுற்றுலா செல்வார்களா? இல்லை வழக்கு போட்டவர் நேரில் முருகனிடம் சென்று கொடுத்தால் அவர் இது என்னுடைய இடம் எனக்கு கூறுவாரா?” என்று பல்வேறு விமர்சனம் செய்தார்.
“ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூட இவ்வளவு கொள்ளை நடந்ததில்லை. ஆனால் திமுக ஆட்சியில் மலைகள் அழிக்கப்படுகின்றன. குறிப்பாக மணல் மற்றும் கல் குவாரிகள் அதிகளவில் செயல்படுகின்றன. குவாரி உரிமையாளர்கள் முறையாக செயல்பட்டால் அவர்களிடம் சென்று மேலும் அதிகமாக இடங்கள் எனக் கூறி அவர்களிடம், தேர்தல் நிதியாக 50 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்படுகிறது” என குற்றச்சாட்டு முன்வைத்தார்.























