அவசர தேவைகளுக்கு 108 ஆம்புலன்ஸை இனிமேல் வாட்ஸ்-அப் மூலம் அழைக்கலாம். தமிழ்நாட்டில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பொது மக்களிடையே மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. 

Continues below advertisement

நாடு முழுவதும் நகரம் தொடங்கி கிராமம் வரையிலான மக்களுக்கு மருத்துவ சேவை முற்றிலும் கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய, மாநில அரசுகள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மக்களை தேடி மருத்துவம் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி அரசு தலைமை மருத்துவமனை வரை தரமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்தை விட அதிகமான மக்கள் அரசு மருத்துவமனையை நாடி சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

108 ஆம்புலன்ஸ் சேவை

இந்த நிலையில் அவசர மருத்துவ சேவை ஏற்பட்டால் மக்கள் உடனடியாக 108 என்ற எண்ணுக்கு அழைத்து ஆம்புலன்ஸ் சேவையை பெறுகின்றனர். இந்தியா முழுவதும் இந்த சேவை உள்ளது. தமிழ்நாட்டில் இந்த திட்டம் 2008ம் ஆண்டு அப்போதைய திமுக முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. இந்த சேவையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் கோடிக்கணக்கானோர் பயன்பெற்றுள்ளனர். 

Continues below advertisement

108 ஆம்புலன்ஸை அழைத்தால் சம்பந்தப்பட்ட இடத்தை அடைய பெருநகரங்களில் 6 நிமிடங்கள் 59 வினாடிகளும், நகர்ப்புறங்களில் 9 நிமிடங்கள் 40 வினாடிகளும், கிராமப்புறங்களில் 11 நிமிடங்கள் 31 வினாடிகளும், மலைப்பகுதிகளில் 13 நிமிடங்கள் 18 வினாடிகளும் எடுத்துக் கொள்ளும். சாலை விபத்துகள் ஏற்பட்டால் 9 முதல் 10 நிமிடங்களுக்குள் செல்லும் வகையில் செயல்பட்டு வருகின்றன. கிட்டதட்ட தமிழ்நாட்டில் மட்டும் 1,353 ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகின்றன.

வாட்ஸ்-அப் மூலம் அழைக்கலாம்

இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவையை மேலும் விரைவுப்படுத்தும் விதமாக ஒரு புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் வாட்ஸ்-அப் மூலம் ஆம்புலன்ஸை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் உதவி தேவைப்படுவோர் 108 என்ற எண்ணுக்கு மட்டுமல்லாமல்  9445030725 என்ற வாட்ஸ்அப் எண் மூலமும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு ஹாய் என மெசெஜ் அனுப்ப வேண்டும். இதனைத் தொடர்ந்து 108 அழைப்பு மையத்திலிருந்து தகவல் சரிபார்ப்புக்காக போன் வரும். இதனைத் தொடர்ந்து வாட்ஸ்-அப் மூலம் தங்கள் இருப்பிடத்தை அனுப்பலாம். இதன்மூலம் எளிதாக ஆம்புலன்ஸ் உதவி தேவைப்படுபவர்கள் இடத்தை அடைய முடியும்.