மகளிர் முன்னேற்றத்திற்கான திட்டங்கள்
மகளிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர்கள் சொந்த உழைப்பில் முன்னேற அடுத்தடுத்து பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக கம்மியான வட்டியில் கடன் உதவி, மானிய உதவி திட்டங்கள், மகளிர் உரிமை தொகை என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் மகளிர் சுய உதவிக்களுக்கு தனி நபர் கடன் உதவி திட்டம், கூட்டு கடன் உதவி திட்டத்தையும் நடைமுறைப்படுத்துகிறது. இந்த நிலையில் தற்போதைய காலத்திற்கு ஏற்ப நவீன ஆடை அலங்கார வேலைப்பாடு பொதுமக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. ஆரி ஒர்க் வேலை மூலம் ஒரு ஜாக்கெட் தைப்பதற்கே பல ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது.
மகளிர்களுக்கு ஆரி ஒர்க் பயிற்சி
எனவே மகளிர்களுக்கு ஆரி ஒர்க் பயிற்சி இலவசமாக அரசு வழங்கவுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு மகளிர் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் பல்வேறு இலவச திறன் பயிற்சிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. வருகிற ஜனவரி மாதம் முதல் மகளிருக்கு பயனளிக்கும் வகையில் ஆரி வேலைப்பாடு மற்றும் தையல் பயிற்சி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகள் மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட இயக்க மேலாண்மை மையங்களில் நடத்தப்படவுள்ளது.
ஜனவரி முதல் மகளிர்களுக்கு ஆரி ஒர்க் பயிற்சி
ஆரி வேலைப்பாடு மற்றும் தையல் பயிற்சியானது ஜனவரி மாதம் 05 ஆம் தேதி முதல் 30 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. பயிற்சிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் ‘சமுதாயத் திறன் பயிற்சிப் பள்ளிகள்’ மூலம் வழங்கப்படவுள்ளது. இதில் பெண்கள் தையல் அடிப்படைகள், ஆரி வேலைப்பாட்டின் நுணுக்கங்கள், வடிவமைப்பு, நவீன டிசைன் முறைகள் மற்றும் சுய தொழில் தொடங்க தேவையான வழிகாட்டுதல்களையும் கற்றுக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.
ஆரி ஒர்க் பயிற்சியில் இணைவது எப்படி.?
இந்த ஆரி ஒர்க் பயிற்சியின் முக்கிய சிறப்பம்சமாக இது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது. குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்கள் வீட்டிலிருந்தபடியே பல ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டவும், தங்களுக்கென சுய தொழில் தொடங்கவும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. ஆரி ஒர்க் பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள், தங்கள் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை நேரடியாக அணுகி கூடுதல் விவரங்களை தெரிந்து கேட்டு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.