பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல; தமிழர் பெற்ற உணர்வு என்று அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பேற்ற தினத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 


பேரறிஞர் அண்ணா


பேரறிஞர் அண்ணாவைப் பற்றிய முன் அறிமுகம் பெரிதாக யாருக்கும் தேவையில்லை. மிழ்நாட்டைத் தாண்டி தென்னிந்திய மாநிலங்களிலும் பரவலாக பேசப்படும் வாசகம் I am belongs to dravidian stock. இந்த வாசகத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறதென்றால் அதைச் சொன்னவர் அவ்வளவு முக்கியமானவர். 


இன்னும் சொல்லப்போனால் தற்போதைய நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தேவையாகவும் இருப்பவர். வேறு யாருமல்ல, பண்ணையார்களின் ஆட்சி என்று சொல்லப்பட்ட காங்கிரஸ் கட்சியினரின் ஆட்சிக்கு நிரந்தரமாக முடிவுகட்டி கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் திராவிடக்கட்சிகளுக்கு தமிழ்நாட்டை ஆள அடித்தளத்தைப் போட்ட சி.என்.அண்ணாதுரை என்கிற அண்ணாதான்.


அண்ணா மாநிலங்களவையின் முதல் முறையாக பேசுகிறார். அவையில் நேரு உள்ளிட்ட பலர் இருக்க தனது கன்னி உரையை ஆரம்பிக்கிறார். ’’நான் ஒரு திராவிடன். என்னை திராவிடன் என அழைத்துக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராத்தியருக்கோ எதிரானவன் அல்ல. ராபர்ட் பர்ன்ஸ் குறிப்பிட்டது போல, மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன் தான். என்னை திராவிட இனத்தை சேர்ந்தவன் என்று அழைத்துக் கொள்ளும்போது திராவிடனிடம் இந்த உலகத்துக்கு வழங்க திட்டவட்டமான, தெளிவான மற்றவைகளிடமிருந்து வேறுபட்ட சில திடமான, வித்தியாசமான கருத்து உள்ளது என நம்புகிறேன். 


சுயநிர்ணய உரிமையே எங்களின் தேவை. இந்த அவையின் உறுப்பினர்கள் காட்டிய அன்பை பல நேரங்களில் பார்த்தேன். நான் இங்கு வந்து இவ்வளவு அன்பைப் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. சில ஹிந்தி மொழி பேசும் உறுப்பினர்களால் ஏற்படுத்தப்படும் விரும்பத்தகாத செயல்களை அந்த அன்பு மறக்கடிக்க வைக்கிறது. உங்களோடு ஒரே நாடாக இருக்கவும் எனக்கு விருப்பம்தான். ஆனால் ஆசை வேறு, யதார்த்தம் வேறு’’ என்று தொடர்ந்து அண்ணா பேச, நேரு உள்பட மொத்த அவையும் ரசித்துக் கேட்டது.



இவர் 1957ல் சட்டமன்ற பொதுத்தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்டு பதினைந்து இடங்களில் வெற்றி பெற்றார். 1962 அடுத்த தேர்தலில் 50  இடங்களைப் பிடித்து திமுக எதிர்க் கட்சி அந்தஸ்தைப் பிடித்தது. அடுத்த 1967 சட்டமன்ற தேர்தலில் தனது இயக்கத்தை ஆட்சிக்கட்டிலில் ஏற வைத்துவிட்டார்.1967ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி முதல்முறையாக முதல்வராக பதவியேற்றார்.


இந்நிலையில் பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல; தமிழர் பெற்ற உணர்வு என்று அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பேற்ற தினத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ’’நாம் செல்லுகின்ற திராவிட மாடல் பாதைக்குப் பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று!


"ஏ தாழ்ந்த தமிழகமே!" எனத் தட்டியெழுப்பி, தமிழ்நாட்டைத் தலைநிமிர வைத்த பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல; தமிழர் பெற்ற உணர்வு! பேரறிஞர் பெருந்தகையின் இலட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம்!’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.