வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ தொடர்பாக தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு, என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

  


தமிழ்நாடு பேரிடர்‌ மீட்பு படையின் 986 ஆளிநர்கள்‌ கொண்ட 18 குழுக்கள்‌, 170 வகையான பேரிடர்‌ மீட்பு உபகரணங்களுடன்‌ தயாராக உள்ளன. அவற்றில்‌ 06 குழுக்கள்‌ ஆவடியில்‌ உள்ளன. இவை சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மற்றும்‌ கடலூர்‌ மாவட்டங்களில்‌ பேரிடர்‌ மீட்புப்‌ பணிகளை மேற்கொள்ள தேவையான உபகரணங்களுடன்‌ தயார்‌ நிலையில்‌ வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 12 குழுக்கள்‌, மற்ற கடலோர மாவட்டங்கள்‌ உள்ளிட்ட பகுதிகளில்‌ பேரிடர்கள்‌ ஏற்பட்டால்‌ எதிர்கொள்வதற்காக முன்னெச்சரிக்கையாக பணியில்‌ அமர்த்தப்பட்டுள்ளன. இந்த அணிகள்‌ வானிலை அறிக்கை மற்றும்‌ மாவட்டமாநகர பேரிடர்‌ சிறப்புக்‌ கட்டுப்பாட்டறைகளில்‌ இருந்து பெறப்படும்‌ தகவல்களின்‌ அடிப்படையில்‌ பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு
உடனடியாக அனுப்பப்பட்டு பேரிடர்‌ மீட்பு பணிகளை மேற்கொள்ளும்‌.


தமிழ்நாடு பேரிடர்‌ மீட்பு படையினருக்கு வெள்ளப்பெருக்கு மற்றும்‌ புயலால்‌ ஏற்படும்‌ பேரிடர்களை எதிர்கொள்வதற்கான ஒத்திகை பயிற்சி NDMA மற்றும்‌ SDMA  ஆணையங்களின்‌ மேற்பார்வையில்‌ 02.09.2023 அன்று சென்னை, செங்கல்பட்டு, கடலூர்‌, நாகப்பட்டினம்‌ மற்றும்‌ மயிலாடுதுறை ஆகிய 05 மாவட்டங்களில்‌ 30 இடங்களில்‌ நடத்தப்பட்டது.


மேலும்‌, கடந்த ஆண்டுகளில்‌ பெற்ற அனுபவங்கள்‌ அடிப்படையில்‌ தேவையான உபகரணங்கள்‌ ரூபாய்‌ 75 லட்சம்‌ செலவில்‌ வாங்கப்பட்டு பேரிடர்‌ மீட்புக்‌ குழுக்களுக்கு வழங்கப்பட்‌டுள்ளன.


முன்னெச்சரிக்கை நடவடிக்கை பயிற்சி


தமிழ்நாடு அதிதீவிரப்படை பயிற்சி பள்ளியின்‌ மூலம்‌ 17,305 காவல்‌ ஆளிநர்களுக்கும்‌, 1095 ஊர்‌ காவல்‌ படை ஆளிநர்களுக்கும்‌ மற்றும்‌ 793 தன்னார்வலர்களுக்கும்‌ வெள்ளப்பெருக்கு, புயல்‌, கனமழை காலங்களில்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது சம்மந்தமாக பயிற்சி அளிக்கப்பட்‌டுள்ளது.


வெள்ளப்பெருக்கின்‌போது அதிகமான பாதிப்புக்கு உள்ளாகும்‌ இடங்கள்‌, தாழ்வான பகுதிகள்‌, கரையோர பகுதிகள்‌ மற்றும்‌ கடல்‌ அரிப்பினால்‌ பாதிக்கப்படும்‌ பகுதிகள்‌ கண்டறியப்பட்டு காவல்துறை ஆளிநர்கள்‌ பேரிடர்‌ மீட்பு உபகரணங்களுடன்‌ தயார்‌ நிலையில்‌ வைக்கப்பட்‌ டுள்ளனர்‌.


சிறப்பு கட்டுப்பாட்டறை 


வடகிழக்குப்‌ பருவமழைக்காக ADGP Operations அலுவலகத்தில்‌ சிறப்பு கட்டுப்பாட்டறை 24 * 7 மணிநேரமும்‌ தொடர்ந்து செயல்பட்டு வருகிறது, இந்த கட்டுப்பாட்டறையானது மாநில அவசரநிலை மையம்‌ (SEOC), மாவட்ட அவசரநிலை மையங்கள்‌ ((DEOC) மற்றும்‌ காவல்துறையில்‌ உள்ள அனைத்து மாவட்ட மாநகர கட்டுப்பாட்டறைகளுடனும்‌ தொடர்பில்‌ உள்ளது.


அனைத்து மாநகரம்‌, மாவட்டங்களிலும்‌ பேரிடர்‌ மீட்பு சிறப்பு கட்டுப்பாட்டறைகள்‌ 24 மணி நேரமும்‌ செயல்படும்‌. இந்த கட்டுப்பாட்டறைகள்‌ அனைத்து துறைகளுடன்‌ குறிப்பாக தங்களின்‌ எல்லைகளுக்குட்பட்ட காவல்‌ நிலையங்களுடன்‌ தொடர்பில்‌ இருந்து அவ்வப்போது கிடைக்கப்பெறும்‌ தகவல்களை பெற்று ADGP Operations அலுவலகத்தில்‌ உள்ள சிறப்பு கட்டுப்பாட்டறைக்கு அறிக்கை அனுப்பும்‌. வானிலை ஆய்வு மையத்தின்‌ முன்னறிவிப்புகள்‌ மற்றும்‌ எச்சரிக்கைகளை கவனித்து அதற்கேற்றவாறு விரைந்து செயல்படும்‌. மேலும்‌, அந்தந்த எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில்‌ பெய்த மழைப்பொழிவின்‌ அளவு, அணைகளின்‌ நீர்மட்டம்‌ போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்படும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


24 மணி நேர அவசர உதவி எண்கள்‌


112, 1070, 9445869843, 94458 69848