குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 


ஜனவரி 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.   வடதமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 


ஜனவரி 21 மற்றும் 22 ஆம் தேதி, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 


உறைபனி எச்சரிக்கை:


16.01.2024 மற்றும் 17.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின்  ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


வடகிழக்கு பருவமழை விலகும் நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையில் எதிர்வரும் வாகனங்கள் தெரியாத அளவு பனிப்பொழிவு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகள் எரியவிட்டப்படி இயற்றி வருகின்றனர். சென்னை மட்டுமல்லாமல், கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான வெள்ளலூர், நீலாம்பூர், தென்னம்பாளையம், கருமத்தம்பட்டி, கணியூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. எதிரே இருப்பவை எதுவும் தெரியாத அளவிற்கு, வெண் திரை போல பனி மூட்டம் இருந்தது.


இதேபோல நீலகிரி மாவட்டம் உதகையில் உறைபனி தொடங்கியுள்ளது. கடும் குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. நீர்நிலைகள், பச்சை புல்வெளிகளில் பனிப்படலம் படர்ந்து காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை குளிர்காலம் நீடிக்கும். இக்காலங்களில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். மேலும் உறை பனி பொழிவும் இருக்கும்.