தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெயிலில் தாக்கம் குறைந்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழையும் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி கடந்த குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஜூன் 6 முதல் 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமானது முதல் கனமானது வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஆங்காங்கே சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நீலகிரி, கோயம்புத்தூர்,தேனி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்