தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெயிலில் தாக்கம் குறைந்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழையும் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஏற்கனவே குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஜூன் 6, 7 ஆகிய 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,திருப்பத்தூர், வேலூர் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இதேபோல் நாளை முதல் (ஜூன் 7) முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்ட்டுள்ளது. மேலும் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்