நீட் தேர்வு ரத்து அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே முன்வைக்கும் கோரிக்கை. கடந்த அதிமுக ஆட்சியில் இதை நிறைவேற்ற முடியவில்லை.
இப்போது நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டம் தொடங்குவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் அதிமுக சறுக்கிவிட முதல்வர் ஸ்டாலின் இதில் வெற்றிக்கண்டு மாணவர்களைக் கரை சேர்ப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் இளங்கலையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். இந்திய அளவில் பல்வேறு கல்வி வாரிய பாடத்திட்டம் இருக்க அனைத்து மாணவர்களையும் சமமாக பாவித்து தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது அநீதி என்பதே தமிழ்நாட்டின் திராவிட ஆட்சியாளர்களின் கருத்து.
நீட் தேர்வை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் இதே விவகாரத்தில் இரண்டு சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஒன்று இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்துக்கானது. மற்றொன்று முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து தொடர்பானது. ஆனால், இந்த இரண்டு மசோதாக்கள் மீதும் குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் மத்திய அரசு மாநில அரசின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது என்று கூறலாம்.
சரி, அதிமுக அரசு நிறைவேற்றிய மசோதா தோல்வியுற்ற நிலையில் அதே பாணியில் திமுக செய்துள்ளது வெற்றியைக் கொடுக்குமா? ஏனெனில் இரண்டு மசோதாக்களுமே பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மாணவர்கள் மாநில அரசு, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ என்று எந்தப் பாடப்பிரிவில் படித்தாலும் கூட பாகுபாடின்றி பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதில் திமுகவுக்கு சாதகமாக ஒரு வரலாறு இருக்கிறது. 2005-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின் போது மருத்துவப் படிப்புகளுக்காக இருந்த பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், அது மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர், சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றம் அதையும் தள்ளுபடி செய்தது. அதில், மாநில அரசின் பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு மட்டுமே பொது நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது ஏற்புடையது அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்தது.
2006-ஆம் ஆண்டில் திமுக ஆட்சி அமைந்தது. அப்போது திமுக மீண்டும் ஒரு சட்ட மசோதாவைக் கொண்டுவந்தது. அதில் அனைத்து பாடவாரியங்களின் பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மருத்துவ பொது நுழைவுத் தேர்விலிருந்து விலக்களிப்பதாகத் தெரிவித்தது. இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. 2007 மார்ச் 7-இல் அரசு இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் வழங்கினார். இதனால், மருத்துவ நுழைவுத் தேர்வு தமிழ்நாட்டில் ரத்தானது. இப்போது இதே பாணியை குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற திமுக பின்பற்றலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது மிகப்பெரிய சவாலான வேலைதான்.
2007-ஆம் ஆண்டில் திமுக மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்தது. ஆனால் இப்போது மத்திய அரசில் திமுகவுக்கு எந்தப்பிடிமானமும் இல்லை. மேலும், மோடி அரசுக்கு நீட் தேர்வை ரத்து செய்யும் எண்ணம் துளியளவும் இல்லை. மருத்துவக் கல்வியில் நீட் மட்டுமே தரத்தை உறுதிப்படுத்தும் என்று பாஜக உறுதிபடத் தெரிவிக்கும் சூழலில் தமிழகத்துக்கு மட்டும் விலக்களித்தால் அது குறித்து உச்ச நீதிமன்றத்தில் விளக்கமளிக்க நேரிடும்.
2021 சட்ட மசோதாவில் ஒரே ஒரு புதிய அம்சம் இருக்கிறது என்றால் அது திமுக ஆட்சி அமைந்தவுடன், நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட நீட் தேர்வு ஆய்வுக் குழு அறிக்கையில் உள்ள ஒரு கருத்து. நீட் தேர்வு சமூகப் பொருளாதார ரீதியாக மாணவர்கள் மீது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை ராஜன் அறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது. அந்த அறிக்கையின் பெரும்பாலான பரிந்துரைகள் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்ட மசோதாவின் முன்னுரையில் இடம் பெற்றுள்ளது. நீட் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் சமவாய்ப்பைக் கொடுக்கவில்லை. பணக்காரர்களுக்கான வாய்ப்பை உறுதி செய்வதாக உள்ளது. நீட் தேர்வு மூலமே மருத்துவப் படிப்பில் அனுமதி என்ற நிலை நீடித்தால் அது மாநிலத்தின் சுகாதாரக் கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிராமப்புறங்களில் சேவை செய்ய மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படுத்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு விலக்குக்கு இவையெல்லாம் நல்ல வாதங்களாக அமையலாம் ஆனால், குடியரசுத் தலைவர் ஒப்புதல் என வரும்போது முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அரசின் துணையும், சட்டத்தின் துணையும் தேவையாகவும் இருக்கிறது