விழுப்புரம் டாஸ்மாக் கடைக்கு வந்த புது லோடு: பொதுமக்கள் கொந்தளிப்பு!
மூடுவதாக அரசாணை வெளியிட்ட டாஸ்மாக் கடைக்கு வந்த புது மதுபானங்கள்- விழுப்புரத்தில் பொதுமக்கள் அதிர்ச்சி

விழுப்புரம்: தமிழக அரசு மூடுவதாக அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்ட டாஸ்மாக் கடைக்கு, திடீரென லாரியில் பெட்டி பெட்டியாக புதிய மதுபானங்கள் கொண்டு வந்து இறக்கப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுவிலக்கு மற்றும் கடைகள் குறைப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளைக் கணக்கெடுத்து, முதற்கட்டமாக 717 கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவின்படி, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் மட்டும் மொத்தம் 11 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என பட்டியலிடப்பட்டிருந்தது.
விழுப்புரம் நகரின் மையப்பகுதியான ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடையால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும், அருகில் உள்ள கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் பல ஆண்டுகளாக கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
தற்போது அரசு வெளியிட்ட மூடல் பட்டியலில் இந்த கடையும் இடம்பெற்றிருந்ததால், இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அரசாணை வெளியான மறுநாளே, கடையில் எஞ்சியிருக்கும் மதுபானங்களை வாங்குவதற்காக குடிமகன்கள் அங்கே படையெடுக்கத் தொடங்கினர். இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேட்டபோது, "கடையில் உள்ள பழைய சரக்குகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தவுடன், கடை நிரந்தரமாக மூடப்பட்டு சீல் வைக்கப்படும்" என்று தெரிவித்திருந்தனர்.
பொதுமக்கள் எதிர்பார்த்தபடியே அந்த டாஸ்மாக் கடையில் இருந்த பழைய மதுபானங்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து, கடை மூடப்படும் நிலைக்கு வந்தது. ஆனால், நேற்று யாரும் எதிர்பாராத விதமாக, அந்த கடைக்கு ஒரு லாரியில் பெட்டி பெட்டியாக பீர், பிராந்தி உள்ளிட்ட புதிய மது பாட்டில்கள் கொண்டு வரப்பட்டு கடையில் இறக்கி வைக்கப்பட்டன. பழைய சரக்கு தீர்ந்ததும் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று நம்பியிருந்த பொதுமக்கள், மீண்டும் லாரியில் புதிய சரக்குகள் வந்து இறங்குவதைக் கண்டு நிலைகுலைந்து போயுள்ளனர்.
பொதுமக்கள் எழுப்பும் காரசாரமான கேள்விகள்
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு சில அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கின்றனர், அரசாணை வெளியிட்ட பிறகும், மூடப்பட வேண்டிய கடைக்கு எதன் அடிப்படையில் புதிய மதுபானங்கள் சப்ளை செய்யப்படுகின்றன? தவெக அரசு அறிவித்த 717 கடைகள் மூடல் என்பது உண்மையிலேயே நடைமுறைப்படுத்தப்படுமா? அல்லது இது வெறும் கண்துடைப்பு நாடகமா? வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் அருகே உள்ள கடைகள் மூடப்படும் என்று கூறிவிட்டு, மக்கள் அதிகம் புகார் அளித்த பல கடைகள் இன்னும் பட்டியலில் விடுபட்டிருப்பது ஏன்? விழுப்புரம் நகரின் முக்கியப் பகுதியில் நடந்துள்ள இந்தச் சம்பவம், அரசின் மீதான நம்பகத்தன்மை குறித்தான விவாதங்களை உள்ளூரில் கிளப்பியுள்ளது. மாவட்ட நிர்வாகமும், டாஸ்மாக் உயர் அதிகாரிகளும் தலையிட்டு இந்த கடை உடனடியாக மூடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Before You Go
Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
ட்ரெண்டிங் செய்திகள்






















