IPS Officer Transfer : ‘லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புது எஸ்.பி’ சென்னையிலும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..!
’லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பியாக மயில்வாகனனும், மத்திய குற்றப்பிரிவு ஐ.ஜியாக ரம்யா பாரதியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்’

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஐபிஎஸ், ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளின் பணியிட மாற்றங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இந்நிலையில், இன்று தமிழக உள்துறை செயலாளர் 13 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
அதில், (1), கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளராக கும்பகோணம் உட்கோட்டத்தில் பணியாற்றி வரும் அங்கிட் சிங் ஐபிஎஸ்க்கு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு, அவர் சேலம் மாநகர வடக்கு காவல் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். (2), அதே மாதிரி கோவை மாவட்டம் பொள்ளாச்சி உட்கோட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றும் ஸ்ரீஸ்ரீசிங்கிற்கும் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு தரப்பட்டுள்ளது. அவர் திருச்சி மாநகர காவல்துறையில் துணை ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஐ.ஜி.க்கள் பணியிடமாற்றம்
அதோடு, காவலர் சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராக இருந்த ராஜேஸ்வரி ஐபிஎஸ், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரனா குற்ற தடுப்பு துறையின் ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த இடத்தில் பணியாற்றிய ஐ.ஜி. கயல்விழி, சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
குற்றப்பிரிவு ஐஜியாக ரம்யா பாரதி நியமனம்
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரம்யா பாரதி ஐபிஎஸ், மத்திய குற்றப்பிரிவின் ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
வேலூர் எஸ்.பி.மாற்றம்
வேலூர் எஸ்.பியாக பணியாற்றி வந்த மயில்வாகனன் ஐபிஎஸ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய வேலூர் எஸ்.பியாக, சேலம் வடக்கு காவல் துணை ஆணையராக இருந்த சிவராமன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புது எஸ்.பி.
சென்னை - தெற்கு சரக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறையின் புதிய எஸ்.பியாக வேலூர் எஸ்.பியாக பணியாற்றிவந்த மயில்வாகனன் அதிரடியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை மாநகர காவல்துறையிலும் மாற்றம்
அதே நேரத்தில், சென்னை மாநகர காவல்துறையிலும் புதிய மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. ரயில்வே எஸ்.பியாக பணியாற்றிவந்த ஐ.ஈஸ்வரன், அண்ணாநகர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கோயம்பேடு துணை ஆணையராக உத்தயகுமார் ஐபிஎஸ் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். கோயம்பேட்டில் துணை ஆணையராக இருந்த சுஜித்குமார் ஐபிஎஸ், மேற்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
காவலர் சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய எஸ்.பி.
சென்னை மேற்கு மண்டல போக்குவரத்து ஆணையராக பணியாற்றிவந்த சுகாஷினி, காவலர் சீருடை பணியாளர் தேர்வாணைய புதிய எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அதே நேரத்தில் இந்த பணியில் இருந்த நாகஜோதி ஐபிஎஸ், காவலர் பயிற்சி பள்ளி எஸ்.பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.






















