New Pamban Bridge: புதியதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தின் மொத்த மதிப்பு சுமார் 550 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
புதிய பாம்பன் பாலம்:
ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் கடல் பாலமான பாம்பன் பாலம், ஏப்ரல் 6 ஆம் தேதி பிரதமர் மோடியால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட உள்ளது. பொறியியல் ஆச்சரியத்தின் உச்சமாக பாராட்டப்படும் இந்த அமைப்பு, நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தவிர்க்க முடியாத மைல்கல்லாக உருவெடுத்துள்ளது. புதிய பாம்பன் பாலம் இந்திய நிலப்பரப்பை தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கிறது. 1,400 டன்களுக்கும் அதிகமான உற்பத்தி, லிஃப்ட் ஸ்பான்கள் மற்றும் 99 கர்டர்களை மேலேற்றுவது, கடலில் பாதை மற்றும் மின்மயமாக்கல் ஆகியவற்றை உள்ளடக்கிய பணியின் போது ஒரு அசம்பாவிதங்கள் கூட ஏற்படாதது பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது.
வடிவமைப்பு விவரம்:
கடந்த 1914ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்த 100 ஆண்டு கால பழமையான பாம்பன் பாலத்திற்கு மாற்றாக தான் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. ரூ.550 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்திற்கு கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மண்டபம் ரயில் நிலையம் மற்றும் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் பாதையில் உள்ள, இந்த பாலத்தின் மொத்த நீளம் 2.078 கிலோ மீட்டராகும். இது நீர் மட்டத்திலிருந்து 22 மீட்டர் உயரத்தில் 72 மீட்டர் நீளமுள்ள மைய உயர்த்தக்கூடிய அமைப்பை கொண்டுள்ளது. முந்தைய பாலத்தை காட்டிலும் 3 மீட்டர் கூடுதல் உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புகளுக்காக அமெரிக்காவில் உள்ள கோல்டன் கேட் பாலம், லண்டனில் உள்ள டவர் பாலம் மற்றும் டென்மார்க் மற்றும் ஸ்வீடனை இணைக்கும் ஓரெசுண்ட் பாலம் ஆகியற்றுடன் இது ஒப்பிடப்படுகிறது.
நிலைத்தன்மைக்கான பொருட்கள்:
பாக் ஜலசந்தியின் உப்புத்தன்மை மற்றும் அரிக்கும் சூழலைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாலம், நீண்ட ஆயுளை உறுதி செய்வதற்கும் பராமரிப்புச் செலவுகளைக் குறைப்பதற்கும் கான்கிரீட்டில் உயர்தர துருப்பிடிக்காத எஃகு கலவையை கொண்டுள்ளது. பாலத்தில் பயன்படுத்தப்படும் பாலிசிலோக்சேன் வண்ணப்பூச்சு அதன் ஆரம்ப சேவை வாழ்க்கையை 35 ஆண்டுகளாக நீட்டித்து, கடலோர தேய்மானத்திற்கு நீண்டகால தீர்வை வழங்குகிறது.
பாதுகாப்பு அம்சங்கள்:
நில அதிர்வு மற்றும் சூறாவளி எதிர்ப்பு, நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவற்றுடன், இந்தப் பாலம் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதோடு, பிராந்தியத்தில் சுற்றுலா, பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளையும் மேம்படுத்துகிறது.. ரயில் கடக்கும்போது, அதிகபட்ச நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக பாலம் இரு முனைகளிலும் பாதுகாப்பாக உயர் வலுவூட்டப்பட்ட கோபுரங்களால் ஆதரிக்கப்படுகிறது.
செங்குத்து லிஃப்ட்:
முன்பு கிடைமட்டமாக திறக்கக்கூடிய மேனுவல் லிஃப்ட் முறை பயன்பாட்டில் இருந்த நிலையில், புதிய பாலத்தில் ஆட்டோமேடிக் முறையில் செங்குத்தாக உயர்த்தப்படக்கூடிய லிஃப்ட் முறை இணைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட வசதியை கொண்ட நாட்டின் முதல் பாலம் என்பதோடு, பழைய பாலத்தை காட்டிலும் 3 மீட்டர் கூடுதல் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், பாலம் திறக்கப்படாமலேயே சிறிய கப்பல்கள் அதன் வழியாக பயணிக்கலாம். இந்தியாவின் கடலோர மற்றும் நில அதிர்வு நிலைமைகளால் ஏற்படும் சவால்களுடன் அதிநவீன தொழில்நுட்பத்தை இணைத்து, புதிய பாம்பன் பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 98 கிமீ வேகம்:
பழைய பாலத்தின் பழமை மற்றும் பாதிப்புகள் காரணமாக, ரயிலானது மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே அதன் மீது பயணிக்க முடியும். ஆனால், புதிய பாலமானது மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடிய ரயிலையும் அனுமதிக்கிறது. இருப்பினும் கூர்மையான வளைவு போன்ற காரணங்களால், தற்போது மணிக்கு அதிகபட்சமாக 98 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே தற்போது பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்திலேயே, ரயிலானது ஒட்டுமொத்த பாம்பன் பாலத்தையும் கடந்துவிடும். இது இரண்டு பகுதிகளுக்குமான பயண நேரத்தையும், இணைப்பையும் மேம்படுத்துகிறது.
கூடுதலாக, இந்தப் பாலம் 25 டன் அச்சு சுமை திறன் கொண்ட, கணிசமாக அதிக சுமைகளைத் தாங்கும் திறன் கொண்டது. இது எதிர்காலத்தில் வளர்ந்து வரும் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது.