New Low Pressure Area: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்ட பாருங்க
New Low Pressure Area: வரும் 21-ம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில், வரும் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.
வரும் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
கடந்த சில வாரங்களுக்கு முன் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் 23 செ.மீ. அளவிற்கு மழை பெய்தது. இது, கடந்த 12 ஆண்டுகளில் மூன்றாவது அதிகபட்ச மழையாகும். ஆனால், நவம்பரில் மழை திடீரென குறைந்தது. நவம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் வெறும் 1.5 செ.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது.
நவம்பர் மாத சராசரி மழை அளவு 18 செ.மீ. என்பதால், இது மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஒரே நாளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கனமழையை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர் கூறியுள்ளது என்ன.?
இதனிடையே, அடுத்தடுத்து 3 காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதில் ஒன்று புயலாக உருவாகவும் வாய்ப்பு இருப்பதாக, டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது வரை நவம்பர் மாதத்தில் மழை இயல்பை விட குறைவாக பதிவாகியிருந்தாலும், இனி வரும் நாட்களில் பருவமழை தீவிரமடையும் என்றும், அதனால், இயல்பை விட அதிக மழை பதிவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று முன்தினம் முதல் வடகிழக்கு பருவகாற்று தமிழ்நாட்டில் வீசத் தொடங்கியுள்ளதால், மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய உள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, நாளை மறுநாள் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் எனவும், அதனால், வரும் 16-ம் தேதி முதல் மழை பெய்யத் தொடங்கும் எனவும் அவர் கூறியுள்ளார். அதோடு, 17, 18 தேதிகளில் ஒட்டுமொத்த கடலோர மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார்.
மேலும் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாக வாய்ப்பு
இதைத் தொடர்ந்து 19-ம் தேதி உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகும் எனவும், இந்த தாழ்வுநிலை, தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து, லட்சத்தீவு நோக்கி செல்லும் என கணிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். அதன்பின்னர், 21 முதல் 25-ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், மற்றொரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து, வட கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழையை கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
புயலாக மாற வாய்ப்பு
தமிழ்நாட்டில் 25-ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படும் என்றும், மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ள ஹேமசந்தர், அதனைத் தொடர்ந்து, தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.





















