வரும் 15ஆம் தேதி மாட்டுப்பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில்,  மாட்டு பொங்கலன்று, மாடுகளை குளிப்பாட்டி, மஞ்சள், சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, அதற்கு மாலை அணிவித்து விவசாயிகள் அழகு பார்ப்பார்கள்.  அப்போது லெட்சுமி கடவுளே வீட்டிற்கு வருவதாக மாடுகளை வழிபடுவார்கள். மாடுகளுக்கு என்று பாரம்பரியமாக அணிவிக்கபப்டும் நெட்டி மாலை கும்பகோணத்தை அடுத்த திப்பிராஜபுரம் என்ற ஊரில் சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தயாரித்து வருகின்றனர்.




கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் மாலைகள் விற்பனைக்கு வந்தாலும், மாடுகளின் உடலுக்கு தீங்கு ஏற்படாத நெட்டி மாலைகளை வருடந்தோறும் கிராம வாசிகள், பொதுமக்கள் தங்களது மாடுகளுக்கு வாங்கி செல்கின்றனர். ஆனால் இந்த வருடம், குளத்தை துார்வாருகிறோம் என்ற பெயரில் அளவுக்கதிகமாக மண்ணை எடுத்ததால், நெட்டி தாவரம் கிடைக்காததால் பெரும் சிரமத்திற்கிடையில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு சென்று நெட்டியை சேகரித்து, அதனை மாலையாக தயாரித்து, தமிழகம் முழுவதும் விற்பனைக்காக அனுப்பியுள்ளோம்.


எனவே, தமிழக அரசு, மாடுகளுக்கு தீங்கு ஏற்படாதவகையில் உள்ள நெட்டி மாலை தயாரிக்கும் பணியினை அழியாமல் காப்பாற்ற, நெட்டி சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும், இதற்கு அரசு கடனுதவி வழங்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து நெட்டி மாலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்  கூறுகையில்,எங்களது ஊரில் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நெட்டி மாலை தயாரித்து வருகிறோம். நாங்கள் பரம்பரையாக இந்த மாலைகளை தயாரிக்கிறோம்.விவசாய கூலி வேலைகளை பார்க்கும் நாங்கள் தீபாவளி முடிந்ததும் நீர் நிலைகளான ஏரி, குளம், வாய்க்கால் ஆகியவற்றில் வளர்ந்து வரும் நெட்டிகளை தேடி பிடித்து அதனை வெட்டி கொண்டு வந்து வெயிலில் காய வைப்போம்.




இந்த மாலைகளை கோர்க்க தாழம்பு நாரை அறங்தாங்கி, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதியில் தேடி பிடித்து வெட்டி வந்து காயவைப்போம். தாழம்பு நாரும், நெட்டியையும் வாரக்கணக்கில் தேடி அலைந்து அதனை வீட்டுக்கு கொண்டு வந்த பின்னர், கத்தியால் சீவி காயவைத்த பின்னர் கலர் கலராய் உள்ள சாயப்பொடிகளில் நனைத்து அதனை சிறு சிறு துண்டுகளாக்கி, தாழம்பு நாரில் கோர்த்து காயவைப்போம்.பொங்கல் பண்டிகை நெருங்கும் நேரத்தில் தஞ்சை,திருவாரூர், நாகை மற்றும் தமிழகம் முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றோம்.


ஒரு ஜோடி நெட்டி மாலை 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நெட்டி மாலையில் உள்ள தாழம்பு நாரை மாடுகளின் கழுத்தில் அணியும் போது குளிர்ச்சியாகவும், இறுக்கம்  இல்லாமலும்  இருக்கும். ஆனால் பிளாஸ்டிக், காகித பூ மாலைகளில் மெல்லிய கம்பி மூலம் மாலைகள் கோர்க்கப்படுவதால் சில சமயங்களில் மாடுகளில் கழுத்தில் இறுக வாய்ப்புள்ளது. இதனால் தான் விவசாயிகள் நெட்டி மாலைகளை வாங்கி கால்நடைகளுக்கு அணிவிக்கின்றனர்.




தற்போது குளங்கள், ஆற்றின் படுகைகளில் துார் வாருகின்றோம் என மண்ணை அளவுக்கதிகமாக எடுத்ததால், நெட்டிகள் கிடைக்காமல் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பின்னர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நெட்டிகளை சேகரித்து மாலைகளாக தயாரித்து விற்பனை செய்கின்றோம். எனவே, தமிழக அரசு நெட்டி மாலைகளை தயாரிக்கவும் ஊக்குவிக்கவும், நெட்டி சாகுபடி செய்ய வேண்டும், தொழிலாளர்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.