கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படும் மாநகராட்சி பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்ட 44 மாணவ- மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அதுதொடர்பாக திமுக நிர்வாகி வைஷ்ணவி பதிவிட்ட கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

மதிய உணவால் ஏற்பட்ட பிரச்னை

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்படும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்றில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு நேற்று மதியம் வழக்கம்போல மதிய உணவு வழங்கப்பட்டது. இதனை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதே அவர்களில் சிலர் மயக்கம் போட்டு விழுந்துள்ளனர்.  அதேசமயம் சில மாணவர்களுக்கு வாந்தியும் ஏற்பட்டுள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மருத்துவ குழுவினர் பள்ளிக்கு நேரில் வந்து மாணவ, மாணவிகளை பரிசோதனை செய்து முதலுதவி அளித்தனர். 

இதனையடுத்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 30 மாணவர்கள், 13 மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் கோவை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிய வர அவர்கள் அனைவரும் பள்ளி மற்றும் மருத்துவமனை வாயில்களில் குவிந்தனர். பாதிக்கப்பட்ட மாணாக்கர்களின் பெற்றோர்கள் மருத்துவமனையில் தங்கள் பிள்ளைகளைப் பார்க்க அனுமதிக்க வேண்டி ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். 

சாம்பாரில் கிடந்த பல்லி

இப்படியான நிலையில் மாணவ, மாணவியர்கள் உடல்நலக்குறைவுக்கு காரணமாக மதிய உணவு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் சாம்பாரில் பல்லி விழுந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக உணவை சமைத்த ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து ஓரிரு நாட்களில் அந்த மாணவ, மாணவியர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவியர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் தமிழ்நாடு அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளது. 

வைஷ்ணவி பதிவால் சர்ச்சை 

இந்த நிலையில் கோவை மாவட்ட திமுக நிர்வாகி வைஷ்ணவி தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் உடல் நல பாதிப்படைந்த குழந்தைகளையும் பெற்றோர்களையும் நேரில் சென்று நலம் விசாரித்தேன். குழந்தைகள் அனைவரும் "ஊசி மட்டும்தான் பயமா இருக்கு அக்கா மத்தபடி நாங்க ஜாலியாதாங்ககா இருக்கோம்" என்று சந்தோஷமாக உரையாடினார்கள். அனைவரும் நலமுடன் வீடுதிரும்ப தயாராக உள்ளனர்!” என தெரிவித்திருந்தார். 

இதனைக் கண்ட இணையவாசிகள் வைஷ்ணவிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சிகள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜாலியா தாங்ககா இருக்கோம் என சொன்னார்கள் என பதிவிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.