இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது.  குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.

Continues below advertisement

இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.  குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். 

Continues below advertisement

ரயில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக நெல்லை - தாம்பரம் இடையே வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று முதல் (ஆகஸ்ட் 6) தொடங்கியுள்ளது.

திருநெல்வேலியில் இருந்து சென்னை இடையேயான ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு நெல்லை - தாம்பரம் இடையே வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது.

அதன்படி, நெல்லை - தாம்பரம் மற்றும் தாம்பரம் - நெல்லை மூன்று நாட்களுக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, வண்டி எண் 06070 நெல்லை - தாம்பரம் வாராந்திர அதிவிரைவு சிறைவு ரயில் ஆகஸ்ட் 13, 20 மற்றும் 27 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், வண்டி எண் 06069 தாம்பரம் - நெல்லை வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் ஆகஸ்ட் 14, 21 மற்றும் 28 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 1.55 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1.00 மணிக்கு நெல்லை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்களில் இரண்டடுக்கு குளிர்சாதன பெட்டி 1, மூன்றடுக்கு குளிர்சாதனப்பெட்டிகள் 8, தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் 7, இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் 4, மாற்றுத் திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் சரக்கு வாகனம் என மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8.00 மணி முதல் தொடங்கியுள்ளது. மேல் குறிப்பிட்ட தேதிகளில் நெல்லை - தாம்பரம் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்கள் தங்களுக்கான பயண டிக்கெட்களை முன்பதிவு செய்துகொள்ளலாம்.