சிறுமியை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு பாலியல் வன்கொடுமை

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் ( லயது 42 ) ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 2018 - ம் ஆண்டு ஜூலை 7 -ம் தேதி இரவு ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்புவதற்காக காத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியையும் ராமச்சந்திரன் தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டார்.

Continues below advertisement

வழியிலேயே ஆட்டோவில் இருந்த மற்ற பயணிகளை இறக்கி விட்ட அவர் மதுக் கடையில் மது பாட்டில் வாங்கிக் கொண்டு, முக்கூடல் கலியன்குளம் ஆர்ச் அருகே உள்ள இருட்டான பகுதிக்குள் ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார். இருட்டான பகுதிக்குள் ஆட்டோ செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி ராமச்சந்திரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் சிறுமியை மிரட்டி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. பின்னர் தப்பிக்க முயன்ற சிறுமியை கொடூரமாக தாக்கிய ராமச்சந்திரன் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுனருக்கு ஆயுள் தண்டனை

இந்த சம்பவம் குறித்து சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஆட்டோ டிரைவர் ராமச்சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Continues below advertisement

இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சங்கரேஸ்வரி மற்றும் மங்கையர்க்கரசி ஆகியோர் விசாரித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அரசு தரப்பில் வழக்கறிஞர் உஷா ஆஜராகி, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார். வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், ஆட்டோ டிரைவர் ராமச்சந்திரன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, பல்வேறு பிரிவுகளின் கீழ் கடுமையான தண்டனைகளை வழங்கி தீர்ப்பளித்தார்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் ராமச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.