சேலம் அருகே தொடர்ந்து இரண்டாவது முறையாக நீட்தேர்வு எழுதி தோல்வியடைந்ததால் விஷம் அருந்திய மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வடக்குமரை கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளர்கள் கணேசன்-தனலட்சுமி தம்பதியின் மகன் சுபாஷ் சந்திர போஸ். ஏழ்மையான சூழலில் வளர்ந்த மாணவன் சுபாஷ்சந்திரபோஸ், மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்த சுபாஷ் சந்திரபோஸ், கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக முயற்சி செய்து வந்துள்ளார்.முதல் முறை நீட்தேர்வில் 158 மதிப்பெண்களும், நடப்பு ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 261 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். தொடர்ந்து இரண்டு முறையும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத காரணத்தால் கடந்த ஒன்றாம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்கள் மகனை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சுபாஷின் தந்தை கணேசன் கூறுகையில், ‛‛மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த என் மகன் நீட் தேர்வு தோல்வியால் எங்களை விட்டு பிரிந்த துயரம் தாங்க முடியாமல் தவித்து நிற்கிறோம்,’’ என்றார். சுபாஷ் சந்திர போஸின் பெற்றோர், சிறு வயதிலிருந்தே நன்றாக படிக்கும் தங்கள் மகனின் மருத்துவர் கனவை நிறைவேற்றுவதற்காக தங்களுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை விற்று படிக்க வைத்ததாக கூறும் கணேசன், தற்பொழுது தங்களுக்கு இருந்த சொத்தையும் இழந்து பெற்ற மகனையும் இழந்து தவித்து நிற்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். இனி எவருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்று கூறிய அவர் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சுபாஷ் பத்தாம் வகுப்பில் 480 மதிப்பெண் பெற்றதால்தான் மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றதால் தொடர்ந்து நீட் தேர்வு எழுதி வந்தார் என்று கூறினார். மேலும், அரசு இதற்கு நிரந்தர தீர்வு காண வருமாறு சுபாஷின் தந்தை கணேசன் கூறினார். ஏற்கனவே, நீட் தேர்வு எழுத பயந்து சேலம் மேட்டூர் அருகே தனுஷ் என்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி இருந்த நிலையில் சேலத்தில் மேலும் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.