நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் 26ஆம் தேதி ஞாயிறன்று மாபெரும் பேரணி நடைபெறுவிருப்பதாக தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது இந்த போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், டெல்லியில் நடந்த மாணவர் போராட்டத்தின் பின்னணி மற்றும் நீட் தேர்வுக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை TSYF விளக்கியது. நீட் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு, தேசிய தேர்வு முகமை (NTA) செயல்பாடுகள் மற்றும் கல்வியில் மாநிலங்களின் உரிமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை முன்வைத்து மாணவர் அமைப்பு தனது கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தியது.
கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் விவகாரம், தேர்வு நடத்தும் முறையில் ஏற்பட்ட குளறுபடிகள் போன்றவை நாடு முழுவதும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தின. இதையடுத்து டெல்லி ஜந்தர் மந்தரில் காக்கரொச் ஜனதா பார்ட்டி அமைப்பினர் (CJP), SFI, AISA, KYS உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் இணைந்து 'சலோ சன்சத்' என்ற பேரணியை நடத்தின. இந்த போராட்டத்தின் போது காவல்துறை தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு, பெருமளவு கைது நடவடிக்கை மற்றும் வழக்குப்பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதாக போராட்ட அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தும் வகையிலும் தமிழகம் முழுவதும் வகுப்பு புறக்கணிப்பு நடத்தப்படுவதாக TSYF தெரிவித்துள்ளது.
மேலும், ஒன்றிய கல்வி அமைச்சர் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும், தேசிய தேர்வு முகமை (NTA) கலைக்கப்பட வேண்டும், நீட் முறைகேடுகள் குறித்து நீதித்துறை அல்லது சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும், போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் அந்த அமைப்பு முன்வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாகவும், மாநிலங்களின் கல்வி உரிமையில் தலையீடு ஏற்படுவதாகவும் அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து வாதிட்டு வருகின்றன. அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாகவே இன்று நடைபெறும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக மாணவர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
