தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தும் நீட் தேர்வு விலக்கு கோரும் கையெழுத்து இயக்கத்திற்காக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு. செல்லப்பெருந்தகை உள்ளிட்ட முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முன்னோடிகளிடம் கையெழுத்து பெற்று ஆதரவு திரட்டுவதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை புரிந்தனர். 


அதன்பின், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கையெழுத்து போடப்பட்டபின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ நீட் விலக்கு நம்முடைய இலக்கு என்பதை அடிப்படையாக கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தொடங்கப்பட்டது. கழகத்தின் இளைஞரணி, மருத்துவ அணி, மாணவரணி சேர்ந்து சென்னையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் தொடங்கினோம். 


முன்னதாக, சட்டமன்றத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் தீர்மானம் கொண்டு வந்தோம். அதை ஆளுநர் நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டிருந்தார். அதன்பிறகு, தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தல் செய்து குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். 


நீட் தேர்வினால் கடந்த 6 ஆண்டுகளில் 22 உயிர்கள் பறிபோனது. அனிதாவில் ஆரம்பித்து ஜெகதீசன் வரை 22 உயிர்கள் மடிந்துள்ளது. மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு தகுதி இல்லையென்று அவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திமுக கடந்த 2021ம் ஆண்டு கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவித்திருந்தோம். தொடர்ந்து, அதற்கான முயற்சிகளை திமுக அரசு செய்துள்ளது. ஏற்கனவே இந்த கையெழுத்து இயக்கம் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளை பெற்றுள்ளது. சேலத்தில் நடைபெறவுள்ள இளைஞரணி மாநாட்டில் அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்து குடியரசு தலைவரிடம் ஒப்படைக்க இருக்கிறோம். 


banneet.in என்ற ஆன்லைன் தளம் மூலம் 3 லட்சம் கையெழுத்துகளை பெற்று இருக்கிறோம். போஸ்ட் கார்டு மூலம் சுமார் 8 லட்சம் கையெழுத்துகளை பெற்று இருக்கிறோம். இன்று நம் மதசார்ப்பற்ற கூட்டணி கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி, செல்வ பெருந்தொகை ஆகியோர் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்து கையெழுத்து பெற்றோம். தொடர்ந்து, மதசார்ப்பற்ற கூட்டணியின் உள்ள மற்ற கட்சிகளையும் சந்தித்து கையெழுத்து பெற இருக்கிறோம். 


திமுகவின் தனிப்பட்ட பிரச்சனை இது கிடையாது. இது ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வி உரிமை, மருத்துவ உரிமை. அனைத்து இயக்க தலைவர்களையும் சந்தித்து உரிமை கோர இருக்கிறோம்” என்றார்.