இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (NEET) தயாராகிக்கொண்டிருந்த 17 வயது மாணவி, ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் கடந்த வாரம் நான்கு மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


ஹரியானாவில் உள்ள குருகிராமில் வசிக்கும் சிறுமி, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையத்தில் இருந்து நீட் தேர்வுக்கு தயாராவதற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக கோட்டாவில் உள்ள விடுதியில் தங்கி உள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக பேசிய மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் உமா ஷர்மா, “உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஒரு மாதத்திற்கு முன்பு சமூக வலைத்தளத்தில் அந்த பெண் சந்தித்துள்ளார். சனிக்கிழமையன்று, அந்த நபர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். மேலும் அந்த நபர், தனது மூன்று நண்பர்களையும் அங்கு அழைத்துள்ளார்.


சிறுமி அந்த நபரின் வீட்டிற்கு சென்ற பின், 4 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். முதலில் இந்த சம்பவம் தொடர்பாக அவர் வெளியே தகவல் தெரிவிக்க தயக்கம் காட்டிய நிலையில், நண்பர்களிடம் இந்த விஷயத்தை மாணவி பகிர்ந்துள்ளார். பின் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி நண்பர்கள் அறிவுறுத்தியதையடுத்து அந்த மாணவி புகார் அளித்துள்ளார். கடந்த செவ்வாய்கிழமை புகார் அளிக்கப்பட்ட நிலையில், வியாழன் அன்று 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் 18 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள்” என தெரிவித்துள்ளார்.  


குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் 376 டி (கூட்டு பாலியல் வன்கொடுமை) மற்றும் 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும்,  உளவியல் ஆலோசனை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கோட்டா இந்தியாவின் போட்டித் தேர்வுக்கான வணிகத்தின் மையமாக உள்ளது, ஆண்டுதோறும் சுமார் ரூ. 10,000 கோடி வருமானம் அப்பகுதியில் ஈட்டப்படுவதாக மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நாடு முழுவதிலுமிருந்து மாணவர்கள் பத்தாம் வகுப்பை முடித்த பிறகு அதிக எண்ணிக்கையில் கோட்டவில் வந்து தங்கி,  தேர்வு மையங்களில்  பதிவு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.