சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய சாலைகளின் நடுவில் உள்ள கம்பங்களில் காவல்துறையினரால் ‘நீங்க ரோடு ராஜாவா..?’ என்ற அச்சிடப்பட்ட குட்டி பேனர் ஒன்று நெடுதூரம் வைக்கப்பட்டுள்ளது. இது காவல்துறையினரால் ஏன் வைக்கப்பட்டது..? எதற்காக வைக்கப்பட்டது..? என்று இப்போது வரை யாருக்கு தெரியவில்லை.
ஆனால், ஏதோ ஒரு பாதுகாப்பு தொடர்பான அவர்னஸுக்காகதான் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் அவார்னஸுக்காக வைக்கப்பட்டுள்ள பேனரே, வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தையும், உயிரை எடுத்துவிடும் சூழலை தந்துவிடுமோ என்ற அச்சத்தை தற்போது கொடுத்துள்ளது.
இதற்கு காரணம் ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி. அவர்களது கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஏதேனும் பகுதிகளுக்கு வரும்போது, அவரை வரவேற்பதற்காக அக்கட்சியின் தொண்டர்கள் தலைவர்களை வரவேற்று சாலைகளின் ஓரங்களிலும் கட்சி கொடிக் கம்பங்களையும், பேனர்களை வைப்பார்கள். இது தமிழ்நாட்டில் நிகழும் பொதுவான நிகழ்வுதான் என்றாலும், இந்த கொடிக் கம்பங்கள் மற்றும் பேனர்கள் வாகன ஓட்டிகளின் மீது எத்தனையோ அசம்பாவிதங்களை விளைவித்துள்ளது.
உதாரணத்திற்கு, கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை குரோம்பேட்டையில் வசித்து வந்த சுபஸ்ரீ என்ற 23 வயது பெண், பள்ளிக்கரணை சுற்றுச் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் நடைபெற்ற திருமணத்திற்கு வருகை புரிந்த அப்போதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வத்தை வரவேற்று சாலையின் நடுவில் இதுபோன்ற பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சுபஸ்ரீ வந்தபோது, நடுவில் இருந்த பேனர் ஒன்று காற்றில் சரிந்து அவர் மீது விழுந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத சுபஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்த நேரத்தில் அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். லாரியை ஓட்டி வந்த ஓட்டுநரும் அப்போது கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதேபோல், கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே விளம்பரப் பலகை சரிந்து விழுந்து மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்வளவு ஏன் கடந்த மாதம் கூட, திருத்தணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட பேனர் சரிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்படி இந்த பேனர் கலாச்சாரத்தால் எத்தனை விபத்துகள் நடந்துகொண்டிருக்கிறது. இப்படியான சம்பவங்கள் நடக்காமல் இருக்க அப்பகுதியை சேர்ந்த காவல் நிலையத்தில் முறைப்படி அனுமதி பெற்று பேனர்கள் வைக்கப்பட வேண்டும் என்று நிலை உள்ளது. இப்படி பேனர் வைக்க காவல்நிலையங்களில் அனுமதி வாங்கும் நிலையில், சென்னையின் முக்கிய சாலைகளில் காவல்துறையினர் ‘நீங்க ரோடு ராஜாவா..?’ என்ற அச்சிடப்பட்ட குட்டி பேனரை வைத்துள்ளனர். அப்படியே தமிழ்நாடு அரசு அல்லது சென்னை மாநகராட்சி அனுமதியுடன் காவல்துறையினர் பேனர் வைத்திருந்தாலும், இத்தகைய பேனர்கள் முற்றிலும் பாதுகாப்பற்றதாகவே இருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காவல்துறையினரால் வைக்கப்பட்ட இந்த பேனரானது இன்று காலை ஜெமினி பிரிட்ஜில் (அண்ணா மேம்பாலம்) கடந்து வரும்போது குடை சாய்ந்து இருந்தது. சுற்றிலும் 4 ரீப்பர் கட்டை மற்றும் பக்கவாட்டில் ஒரு கட்டையுடன் பேனர் ஒட்டப்பட்டு, வெறும் கட்டிடம் கட்டும் கட்டுகம்பியுடன் காவல்துறையினர் சென்னை மாநகரம் முழுவதும் பேனர்களை வைத்துள்ளது. அதிகபட்சமாக காற்று வேகமாக அடித்தால் கூட இம்மாதிரியான பேனர்கள் கிழிந்து அல்லது சாலைகளில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்த வழிவகுக்கும்.
சாலைகளுக்கு நடுவே வைக்க தகரத்துடன் கூடிய டிஜிட்டல் மையமாக்கப்பட்ட போர்டுகள்தான் சிறந்தது. அதுவே மிகவும் பாதுகாப்பானது. அத்தகைய டிஜிட்டல் மையமாக்கட்ட போர்டுகளைதான் காவல்துறையினர் எப்போதும் சாலைகளின் பயன்படுத்தும். உதாரணத்திற்கு ‘NO FREE LEFT, இது விபத்து பகுதி’ என்ற வாசகங்கள் இடம் பெற்ற போர்டுகள். எனவே, வாகன ஓட்டிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு சிக்னல்களிலும் ஹெல்மெட்கள் இன்றி ஓட்டிவரும் வாகனஓட்டிகளிடம் கட்டணத்தை வசூலிக்கும் காவல்துறையினர் இதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, அவார்னஸுக்கு வைக்கப்பட்ட பேனர்களை உடனடியாக எடுத்துவிட்டு, டிஜிட்டல் மையமாக்கப்பட்ட போர்டுகளை வைத்தால் மிகவும் நல்லது.