என்சிபி தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே மற்றும் என்சிபி தலைவர் பிரபுல் படேல் ஆகியோர் கட்சியின் செயல் தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில பொறுப்பு சுப்ரியா சுலேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேசியவாத  காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் சரத் பவாரின் விருப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வயது முதிர்வு காரணமாக இரண்டு செயல் தலைவர்களை நியமித்துள்ளார். 






1999 ஆம் ஆண்டு சரத் பவாரும் பி ஏ சங்மாவும் இணைந்து நிறுவிய கட்சியின் 25வது ஆண்டு விழாவில் சரத் பவார் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.மகாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப், பெண்கள் இளைஞர்கள் மற்றும் மக்களவை ஒருங்கிணைப்பு பொறுப்பு சுப்ரியா சுலேவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கோவா பிரபுல் படேலுக்கு  ஒதுக்கப்பட்டுள்ளது.


தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியான அஜித் பவார் முன்னிலையில் இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த மாதம், மூத்த அரசியல்வாதியான சரத் பவார் தேசியத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்ட நிலையில் அதனை திரும்பப் பெற்றார்.  சரத் பவாரின் ராஜினாமாவை பற்றி ஆலோசிக்க அமைக்கப்பட்ட என்சிபி குழு மே 5 ஆம் தேதி  அவரது ராஜினாமாவை நிராகரித்தது.


மேலும்  கட்சித் தலைவராக அவரே தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தியது.  தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தேசிய பொதுச் செயலாளர் சுனில் தட்கரேவுக்கு ஒடிசா, மேற்கு வங்கம், வேளாண் துறை மற்றும் சிறுபான்மை துறை பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. டெல்லி தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் நந்தா சாஸ்திரி என்றும் சரத் பவார் அறிவித்துள்ளார்.