மரம் வளர்த்தால் மழை பெய்யும் பழமொழிக்கு ஏற்ப மரம் மூலம் செயற்கை மழை பொழிய வைத்து அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இயற்கை விவசாயி.
வேலம் மரக்கிளையில் பிளாஸ்டிக் குழாய் பொருத்தி சென்சார் முறையில் மழை பொழிவது போல் அமைப்பை செய்து மரங்களின் அவசியம் பற்றி மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இயற்கை விவசாயி.
கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதி மிகவும் வறட்சியான பகுதியாக மாறி தற்போது தமிழகத்திலேயே அதிக வெயில் அடிக்கும் பகுதியாக இருக்கிறது. மழை இங்கு அதிகம் பெய்யாத நிலையில் அதற்கு காரணம் அதிகமான கல்குவாரிகள் இயங்குவதும் மரங்களின் அளவு மிகவும் குறைந்து போனதுதான். அதற்கு ஈடு செய்யும் விதமாக கணக்குப்பிள்ளை புதூர் பகுதியில் வசிப்பவர் செல்லமுத்து. இவர் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தனது வீட்டை சுற்றி இயற்கை சூழலை செம்மைப்படுத்தி இருக்கிறார். அதோடு வீட்டை சுற்றி மூலிகை செடிகள், தேனி வளர்ப்பு, சிறிய அளவிலான உணவு காடு, என்று ஒரு மாடல் பண்ணை போல் அமைத்துள்ளார். இதை காண்பதற்கு பள்ளி கல்லூரி மாணவர்கள் விவசாயிகள் பொதுமக்கள் என பலரும் வருகை தருகின்றனர்.
இவர் தனது வீட்டின் அருகில் உள்ள 25 ஆண்டுகள் பழமையான வேலம் மரக்கிளையில் பிளாஸ்டிக் அமைத்திருக்கிறார். மாணவர்களுக்கு "மரம் வளர்த்தால் மழை பெய்யும்" என்று கூறினால் புரியாது என்பதற்காக செயற்கை மழைப்பொழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதோடு மரத்தின் மேற்கு பக்கம் சென்சார் அமைத்திருக்கிறார். இந்த மரத்தை சுற்றிலும் அரசு, வன்னி, வில்வம், வஞ்சி, கருங்காலி, உள்ளிட்ட 12 ராசிகளுக்கான 27 நட்சத்திர மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். 27 நட்சத்திரங்களை சுற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று ஐதீகத்தின் அடிப்படையில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மரக்கிளைகளில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்களை தண்ணீர் டேங்கில் இணைத்துள்ளார். மாணவர்கள் அந்த மரத்தில் இருக்கும் சென்சாரை அருகில் செல்லும் பொழுது செயற்கையாக டேங்கில் இருந்து பம்ப் ஆகும் தண்ணீர் மரக்கிளையில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாயில் வலி சென்று அந்த கிளைகளில் போடப்பட்ட நுண்ணிய துளைகளில் வழியாக செயற்கையான மழைப்பொழிவு போல் கீழே விழுகிறது.
மாணவர்கள் சென்சாரை விட்டு அகன்றாலும் பத்து நொடியில் வரை தண்ணீர் மழை போல் கீழே பொழிகிறது. அந்த மரத்தை சுற்றி வெயில் அடிக்க மரத்தின் அடியில் மட்டும் திடீரென மழை பெய்வதால் ஒரு கனம் மாணவர்கள் நிஜமல்லவோ என்று மகிழ்ச்சியில் விளையாடி மகிழ்கின்றனர். இதன் மூலம் மாணவர்களுக்கு மரம் வளர்ப்பின் அவசியத்தை உணர்த்துவதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இது மட்டுமில்லாமல் டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களில் மாசு அதிகம் உள்ள பகுதிகளில் இதுபோன்று மரங்களில் செயற்கையாக மழை ஏற்படுத்தினால் மாசு கட்டுப்படுத்தலாம். இதுபோன்று பல்வேறு வகையில் மரங்களின் அவசியம் குறித்து விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.