தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தது குறித்தும், இணைவதற்கு முன் நடந்தது குறித்தும் பிரபல அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். 

Continues below advertisement

அதில் பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகம் காலத்தின் தேவை, கட்டாயம், குரல் என்பதால் தான் அக்கட்சியில் நான் இணைந்தேன். மிக நீண்ட இடைவெளிக்குப் பின் சாமானிய மக்களின் ஆதரவுடன், வரலாற்று மாற்றத்தின் அடையாளமாக திகழ்கிற, இளைஞர்களின் தோளில் நின்று ஒரு தலைவன் இன்று தமிழ்நாட்டின் அரசியலில் வலுவாக கால் ஊன்றியிருக்கிறார். அவரைப் பலப்படுத்த வேண்டியது ஒரு தமிழனின் கடமை என்பதால் இந்த முடிவை நான் எடுத்தேன். 

இப்படி ஒரு முடிவுக்கு நான் தள்ளப்படுவேன் என்பதை நான் கனவில் கூட நினைக்கவில்லை. இருந்தும் இப்படி ஒரு சூழலுக்கு நான் தள்ளப்பட்டேன். இனிமேல் நான் இயங்க முடியுமா என்ற நிலை எழுந்தது. ஆனால் டிசம்பர் 4ம் தேதி தவெக தலைவர் விஜய் உங்களை சந்திக்க விரும்புகிறார். வர முடியுமா என ஆதவ் அர்ஜூனா கேட்டார். அவரை சந்தித்து கட்சியில் இணைத்துக் கொண்டேன். 

Continues below advertisement

அதன்பிறகு எனக்கு கிடைத்த வாழ்த்து 37 ஆண்டுகள் அரசியலில் எனக்கு கிடைக்காத ஒன்றாகும். விஜய்யை சந்திக்கும் முன் வரை பலமுறை யோசனை இருந்தது. விஜய்யின் அமானுஷ்ய துணிச்சலை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். இதுவரை தேர்தலை சந்திக்காத விஜய் கொள்கை எதிரி, அரசியல் எதிரி என தெரிவித்த துணிச்சல் எனக்கு பிடித்திருந்தது. 

அடுத்ததாக செங்கோட்டையன் தன் பக்கம் கொண்டு வந்தது அடுத்த துணிச்சலான நடவடிக்கையாக பார்த்தேன். எம்ஜிஆர் பயணத்தை தொடங்கிய காலத்தில் அவருக்கு பாதை போட்டுக் கொடுத்தவர் திருச்சி சௌந்தரராஜன். அவர் இன்றைக்கும் வாழ்ந்து வருகிறார். திருச்சி சௌந்தர்ராஜன் விஜய்க்கு தனித்து ஆட்சிக்கு வரும் வாய்ப்பு உள்ளது என கூறுகிறார். தவெகவில் சேர்ந்த பிறகு வெளியில் செல்ல முடியவில்லை. அந்தளவு தொண்டர்கள் சூழ்ந்து விடுகிறார்கள். 

ஒரு வீட்டில் இரண்டு ஓட்டு விஜய்க்கு இப்போதே தயாராக இருக்கிறது. மீனவ சமுதாய மக்கள் முழுவதுமாக விஜய்க்கு ஆதரவு தருகிறார்கள். அவரை இன்னொரு எம்ஜிஆராக பார்க்கிறார்கள். விஜய் பின்பற்றும் கொள்கை ரீதியிலான தலைவர்களை சமுதாய ரீதியான வாக்குகளாக நாம் பார்க்கக்கூடாது. என்னை கேட்டால் விஜய் பூத் கமிட்டி கூட அமைக்க வேண்டாம். அந்த அளவுக்கு மக்களின் ஆதரவு அவருக்கு உள்ளது. மக்களிடம் போக வேண்டியது தான் பாக்கி. 

விஜய் மீது மாறாத பாசம், பற்றை வைத்திருக்கிறார்கள். காரணம் தங்களுக்கு பிடித்த தலைவருக்கு அவர்கள் ஓட்டுப்போட போகிறார்கள்” என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.