நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் கன்டெய்னர் லாரியில் பயணித்த கொள்ளையர்களை சுட்டுப் பிடித்துள்ளனர். இதில் இருந்த ஓட்டுநர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். கன்டெய்னர் லாரிக்குள் சொகுசு காரும் கட்டுக்கட்டாகப் பணமும் இருந்தது தெரிய வந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் பகுதியில் இன்று (செப்.27) காலை ஒரு கண்டெய்னர் லாரி சந்தேகத்துக்கு இடமான வகையில் வேகமாக சென்றது. அப்போது பள்ளிக்கு வந்த குழந்தைகள் மீது மோதும் வகையில் லாரி வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்த இரண்டு கார்கள், 4 இரு சக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக குமாரபாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வேகமாகச் சென்ற கண்டெய்னர்
தகவலின் பேரில் வந்த குமாரபாளையம் காவல்துறையினர் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்றனர். ஆனாலும் வாகனத்தை நிறுத்தாமல் வாகன ஓட்டி வேகமாகச் சென்றுள்ளார். இதனால் காவல்துறையினர் வாகனத்தை பின்தொடர்ந்து சென்று கண்டெய்னர் முன் வாகனத்தை நிறுத்தி முயற்சி செய்தனர். ஆனால் கண்டெய்னர் லாரி காவல்துறையினர் வாகனம் மீது மோதும் வகையில் வந்ததால் காவல்துறையினர் அருகில் இருந்த கற்களை எடுத்து லாரியை தாக்கினர்.
இந்த நிலையில் ஈரோட்டிலிருந்து சேலம் செல்லும் சாலையின் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அந்த கண்டெய்னர் லாரியை சோதனை செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதற்கிடையே கொள்ளையர்கள் கடப்பாரையால் தாக்கியதில் எஸ்ஐ ஒருவர் காயம் அடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து லாரிக்கு உள்ளே இருந்த ஓட்டுநர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இன்னொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லாரிக்குள் ரூ.66 லட்சம் பணம்?
லாரிக்குள் வட மாநிலத்தவர் 7 பேர் இருந்ததாகவும் உள்ளே சுமார் 66 லட்ச ரூபாய் பணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. வட மாநிலத்தவர்கள் அனைவரும் போதையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கேரள மாநிலம், திருச்சூரில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் உள்ளே இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே கொள்ளையர்களை மடக்கிய காவல்துறையினர், அவர்களைக் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிப்பு
எஸ்.கே.லாஜிஸ்டிக்ஸ் என்ற பெயரில் இருக்கும் லாரியின் உரிமையாளர் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர், சம்பந்தப்பட்ட இடத்தில் குவிக்கப்பட்டு உள்ளதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.