மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம நாயுடு வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 83.














தேனி மாவட்டம், குப்பிநாயக்கன்பட்டி என்கிற கிராமத்தில் பிறந்தவர். இளமைப் பருவத்திலேயே விளையாட்டு வீரராக விளங்கிய இவர், மாவட்ட அளவில் நடைபெற்ற கூடைப்பந்து விளையாட்டில் பலமுறை சாம்பியன் பட்டம் வென்றவர். விருதுநகர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பின், காவல்துறையில் நேரடி உதவி ஆய்வாளராகத் தேர்வு பெற்றார். எந்த சமரசமின்றி மக்களின் நன்மைக்காக மட்டும் உழைத்த இவருக்கு உதவி ஆணையர், காவல் கண்காணிப்பாளர் எனப் படிப்படியாக பதவி உயர்வு பெற்றார். தமிழக முதல்வரின் விருது,குடியரசுத் தலைவர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். சமீபத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் தான் சந்தித்த சவால்களைப் பற்றியும் அதை எதிர்கொண்ட விதம் பற்றியும்  பேசும் "என் கடமை - ஊழல் ஒழிக" என்ற புத்தகம் வெளியானது.        


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கில் உண்மைகளை வெளிக்கொண்டுவருவதில் சாத்தியமான அனைத்து வித நடவடிக்கைகளையும் ஏற்படுத்தியவர்  நல்லம நாயுடு. 1991-96 தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த செயலலிதா வருமானத்திற்கு அதிகமாகச் சேர்த்ததாக அப்போதைய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். ஜூன் 31-ஆம் தேதி மனுவை விசாரித்த நீதிபதி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஜி.பி.,யாக இருந்த லத்திகா சரணை விசாரிக்க உத்தரவிட்டார். அதன் பின்னர்,  நல்லம நாயுடு இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக மாற்றப்பட்டார்.   


 


1991 முதல் 1996 வரை ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வாங்கிக் குவித்த அசையா சொத்துகளைப் பற்றிய விவரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத் துறை, வணிக வரி, வருமான வரி, அமலாக்க இயக்குனரகம் மற்றும் பிற துறைகளில் இருந்து விற்பனைப் பத்திரங்களை  கேட்டுப் பெற்றார். சுமார், ஒரு லட்சம் பக்கங்கள் கொண்ட 20,000க்கும் மேற்பட்ட ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தினார். அதில் கூறப்பட்டிருந்த வங்கிப் பணப் பரிமாற்றங்கள் மற்றும் யார் யார் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பதையெல்லாம் சேகரித்தார். கிட்டத்தட்ட, 2,400 ஆவணங்கள் வழக்கின் முக்கிய ஆதாரங்களாக அமைந்தன. 


1997 ஜூன்4, ஊழல் தடுப்புச் சட்டத்தில் செயலலிதா மீது வழக்குத் தொடரப்பட்டு மிகவும் வலுவான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தார். 2001 ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, வழக்கு விசாரணை நீர்த்து போகத் தொடங்கின. 


அரசு வழக்கறிஞர்கள் ராஜினாமா செய்தனர், சிறப்பு நீதிமன்ற நீதிபதி மாற்றப்பட்டார். மேலும், குறுக்கு விசாரணையின் போது 76 சாட்சிகளில் 64 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர். இருந்தாலும், ஜெயலலிதாவுக்கான எதிரான குற்றப்பத்திரிக்கை அறிக்கை மிகத் தீவிரமாக இருந்தது. இதன் அடிப்படையில்தான், 2014 செப்டம்பர் 27-ஆம் தேதி, ஜெயலலிதா குற்றவாளி என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு வழங்கினார். ஜெயலலிதாவிற்கு ரூ.100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடியும் தண்டமாகவும் அனைவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.           


முன்னதாக, ஆங்கில ஊடகத்துக்கு அளித்தப் பேட்டியில், " இந்த வழக்கு விசாரணையின் போது எண்ணற்ற சவால்களை எதிர் கொண்டு வந்தேன். பலமுறை, என் குடும்பத்தை ஒழித்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விட்டனர். ஒருமுறை, என் வீட்டில் குண்டுவெடி வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது. செய்வதறியாது திகைத்தோம். நடுஇரவில், மனைவி மற்றும் கைகுழந்தையுடன் தெரு வீதிகளில் தஞ்சமடைந்தோம்" என்று தெரிவித்தார்.                   


 மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண