கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் செயல்பாடுகளை மட்டுமே சார்ந்துள்ளது. எனவே, அமைச்சர் ராஜ்மோகன் உங்கள் பொறுப்புணர்ந்து செயல்படுங்கள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆதரவு கொடுப்பதை விட்டு விட்டு தரமான கல்விக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கீர்த்தனா ஆய்வு
தனது சொந்த தொகுதியான சிவகாசி பகுதியிலுள்ள திருத்தங்கலில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சராக உள்ள கீர்த்தனா சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவி ஒருவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. மாணவிக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்குவதாக திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி சரமாரியாக அமைச்சர் கீர்த்தனாவை சாடியது. இதற்கு கீர்த்தனாவும் சரமாரியாக பதிலடி கொடுத்தார்.
ராஜ்மோகன் கொடுத்த பதிலடி
இந்த நிலையில் இந்த விவகாரம் ஆய்வுப்பணி என்பது காலம், காலமாக நடைபெறுவது தான். அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களின் தொகுதியில் இருக்கும் இடங்களுக்கு செல்வது என்பது மரபு தான். அதனால் கீர்த்தனாவை இந்த விவகாரத்தில் தவறாக எடுக்க வேண்டாம். அந்த மாணவியுடன் நெருங்கி பழக நினைத்து அக்கா ஸ்தானத்தில் இருந்து பேசியுள்ளார் என ஆதரவு தெரிவித்தார்.
வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய நயினார் நாகேந்திரன், “அமைச்சருக்கு அப்புறம் ஆதரவுக் கரம் நீட்டலாம், முதலில் அரசுப்பள்ளிகளைக் கவனியுங்கள் அமைச்சர் ராஜ் மோகன் அவர்களே.. வகுப்புகள் துவங்கி ஒரு மாதம் கடந்த பிறகும் கூட, தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான 4&5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களும், இடைநிலை மாணவர்களுக்கு பயிற்சி ஏடுகளும், 1 முதல் 3 ஆம் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கையேடுகளும் இன்னும் முறையாக வழங்கப்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் கல்வி வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும், பெற்றோர் மத்தியில் கடும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளன.
கோடைக்காலம் முடிந்து சரியாக பள்ளிகள் திறக்கப்படும் வேளையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற நீங்கள், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் இருக்கின்றனரா, பாடப்புத்தகங்கள் முழுவதுமாக பிள்ளைகளுக்கு கிடைக்கப் பெற்றனவா, பள்ளிகளில் தரமான வகுப்பறைகள், சுத்தமான குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளனவா என்பதைத் தானே முதலில் ஆய்வு செய்து உறுதிபடுத்தியிருக்க வேண்டும்? ஆனால், நீங்களோ அரசுப் பள்ளி மாணவிக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதை அதிகாரத் தொனியில் குத்திக் காட்டிய அமைச்சர் கீர்த்தனா அவர்களின் So called “ஆய்வு” சரி தான் என்று கூறி வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆகச் சிறந்த கல்வித்துறை உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் செயல்பாடுகளை மட்டுமே சார்ந்துள்ளது. எனவே, உங்கள் பொறுப்புணர்ந்து செயல்படுங்கள் அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே! அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியையும், பிள்ளைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யுங்கள்” என தெரிவித்துள்ளார்.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்





















