Nagapattinam: நாகப்பட்டினம்: 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்! மக்கள் அவதி! தீர்வு என்ன?
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஊராட்சிக்குட்பட்ட வரதராஜபுரம் கிராமத்தில் சீரற்ற குடிநீர் விநியோகம் இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் சம்பவம் அப்பகுதி மக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி வருகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்னதான் மாறி மாறி திமுக, அதிமுக கட்சிகள் தமிழ்நாட்டை ஆண்டு வந்தாலும், தங்களுடைய ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வந்தாலும் இன்றளவும் தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் வாழும் மக்கள் ஏதேனும் அடிப்படை தேவைகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஊராட்சிக்குட்பட்ட வரதராஜபுரம் கிராமத்தில் சீரற்ற குடிநீர் விநியோகம் இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அங்கு சீயாத்தமங்கை பஞ்சாயத்து மேல்நிலை தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டாலும் ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் ஒருமுறை தான் குழாய்கள் வழியாக அந்த தண்ணீர் கிராமத்தை அடைகிறது. இதனால் கடும் சிரமமடைந்த உள்ளூர்வாசிகள் தினமும் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அந்த ஒரு கிலோ மீட்டர் தூரமும் சீரான பாதை கிடையாது. நீர் அழுத்தம் குறைவாக இருப்பதால் குடிநீர் விநியோகிப்பதில் பிரச்னை நிலவுவதாக சொல்லப்படுகிறது. இந்த வரதராஜபுரம் கிராமத்தில் 30 குடும்பங்கள் வசிக்கும் நிலையில், அதில் 100க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இங்குள்ள நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகம் இருக்கிறது. அதனால் ஆள்துளை கிணறுகள் வசதி அமைக்கப்படாமல் இருக்கிறது. இதனால் நிலத்தடி நீர் உறிஞ்ச முடியாத நிலை உண்டாகிறது.
இந்த கிராமத்திற்கு அருகே ஒரு குளம் நீராதரமாக இருந்தாலும் அந்த நீர் கடுமையான அசுத்தமாக இருப்பதால் கட்டுமான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மற்ற வேலைகளுக்கு அவை உபயோகப்படுத்தப்படுவதில்லை என உள்ளூர் மக்கள் குறை தெரிவித்துள்ளனர். 15 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் தண்ணீரும் தங்களுக்கு போதுமானதாக இல்லை எனவும், அன்றைய நாளில் காலை அரை மணி நேரம், மாலை அரை மணி நேரம் மட்டுமே வரும். அந்த தண்ணீர் எந்த நாளில் வரும் என்பதைக் கூட சில நேரங்களில் கணிக்க முடியாது.
வரதராஜபுரம் கிராமத்திற்குச் செல்லும் சாலை குறுகியதாக இருப்பதால் தண்ணீர் லாரிகளும் செல்ல முடியாத சூழல் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அவசரம் என அழைத்தாலும் தண்ணீர் லாரி மூலம் கிடைப்பதில்லை என அப்பகுதி மக்கள் ஆதங்கப்பட்டுள்ளனர். ஜல் ஜீவன் திட்டத்தின் வீட்டுக்கு வீடு குடிநீர் விநியோகம் செய்யும் பணி முடிவுற்ற நிலையில் இந்த கிராமத்திற்கு இன்னும் தண்ணீர் முறையாக வழங்கப்படாமல் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.























