ராமநாதபுரம்: விவசாய நிலங்கள் மற்றும் ஈர நிலங்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், நாகப்பட்டினம் - தூத்துக்குடி இடையேயான நான்கு வழி பசுமை கடற்கரை சாலைத் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன

Continues below advertisement

பாரத் மாலா திட்டம் 

மத்திய அரசின் ‘பாரத் மாலா’ திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி வரை ₹7,000 கோடி மதிப்பீட்டில் புதிய 4 வழி பசுமை கடற்கரை சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த மாதம் அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

331 கி.மீ. நீள சாலை

இந்த புதிய பசுமைச் சாலையானது தமிழகத்தின் 6 கடலோர மாவட்டங்கள் வழியாக அமைக்கப்பட உள்ளது.

Continues below advertisement
  • நாகப்பட்டினம் - 28.7 கி.மீ.
  • திருவாரூர் - 40.3 கி.மீ.
  • தஞ்சாவூர் - 40.6 கி.மீ.
  • புதுக்கோட்டை - 39.6 கி.மீ.
  • ராமநாதபுரம் - 138.6 கி.மீ.
  • தூத்துக்குடி - 44 கி.மீ.

என மொத்தம் 331 கி.மீ. தொலைவுக்கு இந்த பிரம்மாண்ட சாலை அமைய உள்ளது.

₹11 கோடி நிதி ஒதுக்கீடு

இத்திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்த மொத்தம் ₹11 கோடியே 22 லட்சத்து 41 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், கீழக்கரை, கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்த ₹4 கோடியே 92 லட்சத்து 15 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.

இப்பணிக்காக கடந்த 2024-ம் ஆண்டு முதல் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள், வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், கண்காணிப்பாளர்கள் என 200-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வந்தன.

மாற்றுப் பாதை திட்டம்

இந்த நிலையில், தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள பாதையில் சாலை அமைத்தால் ஏராளமான விளைநிலங்களும், ஈர நிலங்களும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.

இதையடுத்து, விவசாய நிலங்களையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் நோக்கில், இத்திட்டத்தை மாற்று பாதையில் (Alternative Route) செயல்படுத்த மத்திய அரசு திடீரென முடிவு செய்துள்ளது.

அதிகாரிகள் திரும்பப் பெறல்

மாற்றுப் பாதை தேர்வு செய்யப்படும் வரை, தற்போது நடைபெற்று வந்த நிலம் கையகப்படுத்தும் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவரும் மீண்டும் தங்களின் தாய் துறைக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் புதிய மாற்றுப் பாதைகள் ஆய்வு செய்யப்பட்டு, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்படும். அதன்பின்னர், புதிய பாதையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மீண்டும் விரைவாகத் தொடங்கும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.