"கொடி கட்டுவதற்கும் போராட்டங்களுக்கும் பயந்து அச்சப்படுபவர்கள் நாம் தமிழர் கட்சியினர் அல்ல. நாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள். எந்நாடு, என்மக்களுக்காக போராட்டங்களையும் சண்டைகளையும் சந்திக்க தயார்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 


7 தமிழர் உள்ளிட்ட, 20 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய மறுக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று நாகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். அப்போது பேரறிவாளன் முருகன் நளினி உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் அதேபோல் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமியர்களை விடுவிக்காத தமிழக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “திமுகவினர் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் ரகளை செய்வதை நாங்கள் வரவேற்கிறோம். ஏன் என்றால், என் நாடு, என் நிலம், என் மக்கள் என்பதால் நாங்கள் போராட்டங்களையும், சண்டைகளையும் சந்திக்க தயார். நீங்கள் கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோரை பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள். நாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள். கொடிகட்டுவதற்கும், போராட்டங்களுக்கு அச்சப்படுபவர்கள் நாங்கள் இல்லை. நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது சொன்னதை தான், நாங்கள் இப்போது செய்யவேண்டும் என்று சொல்கிறோம். மத்திய அரசு, தமிழர்களை நாட்டின் குடிமகன்கள் என்று கருதுகிறதா? குஜராத்தில் ஒரு மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது மத்திய அரசு வழக்குப்பதிந்தது. 


ஆனால் தமிழர்களிடம் வரியை வாங்கிக்கொண்டு, ஓட்டு வாங்கிக்கொண்டு, வளத்தை கொள்ளையடித்துக்கொண்டு தமிழர்களின் பிரச்னைக்கு குரல் கொடுப்பதி்ல்லை. இதற்கு காரணம் தமிழகத்தில் ஆளும் கட்சியினர் பதிலடி கொடுப்பதில்லை. தக்க பதிலடி கொடுத்தால் நன்றாக இருக்கும். பாஜகவிற்கு நான் பி டீம் இல்லை . திமுகவிற்கு தேர்தல் வேலைகள் பார்த்தது யார்? பிரசாந்த்கிஷோர், சுனில். இவர்கள் யார்? ஆர்எஸ்எஸ்காரர்கள். அமித்ஷாவின் மாணவர்கள். பிகார் பிராமணர்கள். இவர்களை வைத்துக்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றுக்கொண்டு பிராமணர்களை எதிர்கிறோம் என்றால் என்ன அர்த்தம். எங்கள் கட்சியில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் என்று சொன்னது யார், காலம் காலமாக மக்களிடம் பொய்யை சொல்லி கட்சி நடத்துபவர்கள் நாங்கள் இல்லை. பாஜகவிற்கு திமுக தான் ஏ டீம், மற்றொன்று பி டீம். நாங்களில்லை” இவ்வாறு அவர் கூறினார்.