நாம் தமிழர் வேட்பாளருக்கு வந்த சோதனை.. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்!
2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட இந்துஜாவின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விறுவிறுப்பு எடுக்கும் சட்டமன்ற தேர்தல் பணி
2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதில் 2021 சட்டமன்ற தேர்தலில் களம் கண்ட திமுக கூட்டணி அப்படியே போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி வழக்கம்போல தனித்து போட்டி என அறிவித்துள்ளது.
2026ம் சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி களம் காண்பது பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. தேமுதிக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் எந்த கூட்டணியில் இடம் பெறப்போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வேட்பாளரை அறிவித்த சீமான்
இப்படியான நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. பூத் லெவல் மீட்டிங் தொடங்கி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரை அடுத்தடுத்து நடந்து வருகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் முதற்கட்டமாக 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
அதில் சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பில் இந்துஜா அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரின் பெயரின் அவரது கணவர் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இந்துஜா, இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு தன்னுடைய பெயரும், கணவருடைய பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இறந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்துஜா குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பௌ ஏற்பட்டது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளை டிசம்பர் 11ம் தேதிதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. அப்படியான நிலையில் டிசம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகவுள்ளது. அதில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியின்போது வழங்கப்பட்ட விண்ணப்பத்தை நிரப்பி கொடுக்காதவர்கள், இறந்தவர்கள் என 85 லட்சம் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் நீக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.





















