தமிழ்நாடு : கரூரில் பரப்புரையில் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தவெக தலைவர் விஜய், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன் என இரங்கல் தெரிவித்துள்ளார்.
கரூரில் விஜய் பரப்புரை - 30க்கும் மேற்பட்டோர் பலி
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய் திமுக,பாஜகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாகவே தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில், நேற்று 27ம் தேதி நாமக்கல் மற்றும் கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் அவர் மாலையில் பரப்புரையில் மேற்கொண்டபோது அவரை பார்ப்பதற்காக பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். வேலுச்சாமிபுரத்தில் அவரை பார்ப்பதற்காக ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டு 33 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும், 58 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விஜய்யைப் பார்ப்பதற்காகவே அவர்கள் அனைவரும் அங்கு குவிந்தனர். இந்த உயிரிழப்பில் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என பலரும் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்
இந்த சூழலில் கரூரிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த தவெக தலைவர் விஜய் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர, சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களை காண்பதற்காக முன்னாள் அமைச்சர்களான செந்தில்பாலாஜி. எம்.ஆர் விஜயபாஸ்கர் நேரில் சென்ற நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் நாளை கரூர் செல்கின்றனர்.
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய்
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தோருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை
மேலும், இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலியானது தொடர்பாக தமிழக அரசுக்கு விளக்கம் கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.