தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. கேரள மாநிலம் தேக்கடி வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணையின் உயரம் 152 அடி ஆகும். இந்த அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ள  உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த அணையின் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகிறது. இவ்வாறு தென் மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்கும் முல்லை பெரியாறு அணை பல்வீனமாக உள்ளது எனவும், அணையை இடித்துவிட்டு மாற்று இடத்தில் அணையை கட்ட வேண்டுமென்று கேரள அரசு பல்வேறு விதமான கருத்துக்களையும் செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது.

Continues below advertisement

இந்த அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலவர்கள் என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அணையின் உரிமையை தமிழகம் மீட்க வேண்டுமென்றும், அணையில் 152 அடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்த விவகாரத்தை அடுத்து, கேரள அரசு அணை மீதான பல்வேறு கருத்துக்களை முன்வைத்து அதே நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளது. இந்த நிலையில் 'முல்லைப் பெரியாறு அணையை உடைக்க, கேரள அரசு தொடர் முயற்சி செய்கிறது' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.

Continues below advertisement

அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, 'கேரள பாதுகாப்பு பிரிகேட்' என்ற தன்னார்வ நிறுவனம் சார்பில், வழக்கறிஞர் ரசூல் ஜோய் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 'தேசிய மற்றும் சர்வதேச அணை பாதுகாப்பு நிபுணர்களை வைத்து, முல்லைப் பெரியாறு அணையின் முழுமையான பாதுகாப்பு மதிப்பீடு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், அணையின் சீரமைப்பு நடவடிக்கைகளையும், சாத்தியமானால் அணையை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையையும் எடுக்க உத்தரவிட வேண்டும். பெரியாறு அணை அதிக தீவிரம் கொண்ட நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளது. நிபுணர்களின் சமீபத்திய ஆய்வுகள், அந்த அணை, கட்டமைப்பு ரீதியாக ஆபத்தான நிலையில் இருப்பதை காட்டுகின்றன.

அணை உடைந்தால் கேரளத்தின் 6 மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும்' என கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கவாய், 'அணையை வலுப்படுத்த சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் அல்லது அதை மதிப்பிடுவதற்கு ஒரு நிபுணர் குழு நியமிக்கலாம் அல்லது புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயலாம்' என தெரிவித்துள்ளார். அவரது கருத்து தமிழகத்திற்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும். எனவே, முல்லைப்பெரியாறு அணையை இடித்து விட்டு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசு, இதுபோன்ற அமைப்புகள் வாயிலாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருப்பது கண்டனத்துக்குரியது. கேரள அரசின் இச்சதித் திட்டத்தை, தமிழக அரசு முறியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.