திருப்பூரில் பள்ளி மாணவனை சக மாணவர்கள் இரண்டு பேர் சாதிப் பெயரைக் கூறி கிண்டலடித்து தீயில் தூக்கி வீசிய செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சாதி தாக்குதல் அல்ல என்று போலீஸ் விளக்கமளித்தாலும் பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் கண்ணீர் மல்க அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகாவில் வசிக்கும் ஜெயராஜ், சூர்யா தம்பதியினரின் 13 வயது மகன், குன்னத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளியொன்றில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், பள்ளியில் அதே வகுப்பறையில் படிக்கும் சக மாணவர்கள் இரண்டு பேர் சாதிப் பெயர் குறிப்பிட்டு அந்த மாணவனை கிண்டலடித்து வந்திருக்கின்றனர். இருவரும் தொடர்ச்சியாக சாதிய ரீதியாக இழிபடுத்தி வந்த நிலையில், இருவரும் அந்த மாணவனை கை கால்களைப் பிடித்து எரிந்துகொண்டிருந்த குப்பையில் தூக்கி வீசியுள்ளனர்.

தீயில் வலியால் துடித்த அந்த மாணவனை அங்கிருந்த ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். தற்போது அந்த மாணவன் உடலில் மிகக் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் பள்ளியிலிருந்து எந்தவொரு ஆசிரியரும் மருத்துவமனைக்கு வந்து தங்கள் மகனைப் பார்க்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகி திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மாவட்ட காவல்துறை சார்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட இரு மாணவர்கள் அந்த மாணவனை விளையாட்டாகத்தான் தூக்கிப் போட்டனர், சாதிய ரீதியாக இது நிகழவில்லை என்று இது மிகச் சாதாரண நிகழ்வு என்பது போல விளக்கமளித்திருந்தனர்.

ஆனால், பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் அளித்த பேட்டி போலீசாரின் விளக்கத்துக்கு மாறாக உள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. அந்தப் பேட்டியில் மாணவனின் தாயார், ``6ம் வகுப்பில் இருந்தே என் மகனை சாதி சொல்லி சண்டை போட்டுட்டு இருந்தாங்க. கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகி விடும் என நினைத்துக் கொண்டு இருந்தோம். ஆனால் இன்றைக்கு இரண்டு மாணவர்கள் என் பையன் கை காலை பிடிச்சி நெருப்புல போட்டிருக்காங்க. என் மகனுக்கு கை முழுக்க பெரும் காயம் ஏற்பட்டிருக்கு. ஸ்கூல்ல இருந்து ஒரு சார்கூட ஆஸ்பத்திரிக்கு வரல. அங்கிருக்கும் சார், டீச்சர் கூட என் பையன ஊதுபத்தி கலர்ல இருக்குறன்னு கிண்டல் பண்ணிருக்காங்க. இதைச் சொல்லி என்னோட மகன் ரொம்ப நாளா அழுதிருகிறான்" என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட மாணவனை சக மாணவர்கள் சாதி ரீதியாக இழிபடுத்தி தீயில் வீசியது மட்டுமல்லாமல், பாடம் கற்றுத்தரும் ஆசிரியர்களும் நிறத்தை வைத்து கிண்டலடித்திருப்பதும், மாவட்ட காவல்துறை தரப்பில் இது ஒரு பிரச்னையே இல்லை தொனியில் விளக்கமளித்திருப்பதும் அதிர்ச்சியளிக்கும் அதேவேளையில், பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள்  மீண்டும் மீண்டும் நடக்கின்ற போது பள்ளிக்கல்வித்துறை என்னதான் செய்கிறது என்ற கடுமையான கேள்வியும் எழுந்துள்ளது.