"எவ்ளோ கஷ்டப்பட்டாலும் பசங்கள படிக்க வைச்சிடனும்" என பெண் ஒருவர், தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் பேசியது என் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கிறது. உணர்வுப்பூர்வமான வார்த்தைகள் அவை. கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை அந்த பெண்ணின் வார்த்தைகள் உணர்த்தி கொண்டே இருக்கிறது. நாட்டின் மற்ற பகுதிகளை காட்டிலும் தமிழ்நாட்டில் கல்வியின் முக்கியத்துவம் கடைக்கோடி வரை செல்வதில் இங்குள்ள சமூக, அரசியல் பெரும் பங்காற்றின. அந்த வகையில், திராவிட இயக்கங்களின் பங்களிப்பு மகத்தானவை.
தடையை உடைத்தெறிந்த திராவிட இயக்கங்கள்:
கல்வி கற்க தடையாக இருந்த காரணிகளை ஒன்றன் பின் ஒன்றாக கண்டறிந்து, அதற்கான தீர்வை வழங்க தொடர் முயற்சிகளை செய்து வருகிறது. சமூக காரணியாக இருந்த சாதியை எதிர்த்து, திராவிட இயக்கங்களின் போராட்டம் இன்றளவும் தொடர்கிறது. அதேபோல, கல்வி கற்க தடையாக இருந்த பொருளாதார காரணியை ஆராயும்போது, உணவு பெரும் தடையாக இருந்தது. ஒரு வேளை உணவு கூட கிடைக்காத லட்சக்கணக்கான குடும்பங்கள் தமிழ்நாட்டில் இருந்தன.
எனவே, பசியாக இருக்கும் ஏழை, எளிய குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்து வர, அவர்களுக்கு உணவு வழங்கும் மகத்தான திட்டம் தொடங்கப்பட்டது. நாட்டிலேயே முதன்முறையாகப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில்தான் தொடங்கப்பட்டது. சுதந்திரத்துக்கு முன்பே 1923ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அன்றைய மதராஸ் மாகாணத்தை ஆண்ட திராவிட இயக்கங்களின் முன்னோடியான நீதிக் கட்சி அரசு தொடங்கி வைத்தது.
அப்போது, பள்ளியில் 165 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். இத்திட்டத்தில், மேலும் நான்கு பள்ளிகள் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐந்து பள்ளிகளின் மொத்த மாணவர் சேர்க்கை 1922-23இல் 811 ஆக இருந்தது. 1924-25இல் 1,671 ஆக உயர்ந்தது. மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு மாணவருக்கு ஒரு அணாவுக்கு மிகாமல் உணவு வழங்க அனுமதி கேட்கப்பட்டது.
மதிய உணவு திட்டம் - சத்துணவு திட்டம்:
பிரிட்டிஷ் அரசாங்கம் தொடக்கக் கல்வி நிதியிலிருந்து செலவினங்களை அனுமதிக்கவில்லை. இதன் மூலம், ஏப்ரல் 1, 1925இல் திட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 25 பள்ளிகளில் 1,000 ஏழை மாணவர்களுடன் இத்திட்டம் புத்துயிர் பெற்றது.
சுதந்திரத்திற்குப் பின் 1957ல் அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் கே. காமராஜர், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ஆண்டுக்கு 200 நாட்கள் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 1982ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன், தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சத்தான உணவை உறுதி செய்யும் திட்டத்தை அறிவித்தார். 2-5 வயது மற்றும் 5-9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜூலை 1982 முதல் காப்பீடு வழங்கப்பட்டது. செப்டம்பர் 1982 இல், இந்தத் திட்டம் நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 1984 ஆம் ஆண்டில், 10-15 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இது நீட்டிக்கப்பட்டது.
1989ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி, பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அவித்த முட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 2007ஆம் ஆண்டு, திமுக ஆட்சி காலத்தில், வேகவைத்த முட்டை வாரத்தில் மூன்று நாட்கள் வழங்கப்பட்டது. 2010இல், வாரத்தில் ஐந்து நாட்கள் அவித்த முட்டையும், முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழமும் வழங்கப்பட்டது. இதனால் சுமார் 5.7 மில்லியன் மாணவர்கள் பயனடைந்தனர்.
2013ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப முட்டைகளுடன் பலவகையான உணவுகளைச் சேர்த்தார். சத்துணவுத் திட்டம் தற்போது 43,243 மதிய உணவு மையங்களில் செயல்படுத்தப்பட்டு, தினமும் 48.57 லட்சம் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
இது 5-9 வயதுக்குட்பட்ட ஆரம்பப் பிரிவினருக்கும், 10-15 வயதுக்குட்பட்ட உயர் தொடக்கப் பிரிவினருக்கும் வாரத்தில் ஐந்து நாட்கள், மொத்தமாக ஒரு வருடத்தில் 210 நாட்களுக்கு, சூடான சமைத்த சத்தான உணவு வழங்கப்படுகிறது.
காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய 16 மாவட்டங்களில் உள்ள தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளிகளில் சேர்ந்த குழந்தைகளுக்கும் ஒரு வருடத்தில் 312 நாட்களுக்கு, சூடான சமைத்த சத்தான பல்வேறு உணவு வழங்கப்படுகிறது.
சத்துணவு திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்:
ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு (1 முதல் 5 ஆம் வகுப்பு வரை) ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு 100 கிராம் அரிசியும், மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி குழந்தைகளுக்கு (6 முதல் 10 ஆம் வகுப்பு வரை) 150 கிராம் அரிசியும் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 2022ஆம் ஆண்டு, மே மாதம் அரசின் முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அறிவித்தார்.
அறிவிப்பை தொடர்ந்து, கடந்தாண்டு செப்டம்பர் மாதம், அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது, இந்த திட்டத்தால், 1.5 லட்சம் மாணவர்கள், பயன் பெற்று வருகின்றனர். அடுத்த மாதத்திற்குள், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என திமுக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், 17 லட்சம் மாணவர்கள், பயன் அடைய உள்ளனர்.
தனது அரசை 'திராவிட மாடல்' அரசு என கூறும் ஸ்டாலின், காலை உணவு திட்டத்தின் மூலம் வரலாற்றில் தனது பெயரை பதித்துள்ளார். குறிப்பாக, புதிய கல்வி கொள்கையில் அறிவிக்கப்பட்ட காலை உணவு திட்டத்தை செயல்படுத்த முடியாமல் மத்திய அரசு திணறி வரும் சூழலில், காலை உணவு திட்டத்தை திமுக அரசு விரிவுப்படுத்தி வருவது மிக பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
காலை உணவு திட்டத்தால் அதிகரித்த மாணவர்கள் வருகை:
காலை உணவு திட்டம், எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை தெரிந்த கொள்ள தமிழ்நாடு அரசு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், கிடைத்துள்ள முடிவுகள் நம்மை வியக்க வைக்கிறது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்ட 1,545 பள்ளிகளில், 1,086 பள்ளிகளில், மாணவர்களின் வருகை 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
22 பள்ளிகளில், 40 சதவிகிதத்திற்கு மேல் வருகை அதிகரித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மாணவர் வருகை அதிகரித்திருந்தாலும், திட்டம் அமல்படுத்தப்பட்ட திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில், இத்திட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆய்வறிக்கையில் கிடைத்துள்ள முடிவுகள் குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், "மதிய உணவை விட காலை உணவு திட்டம் மிகவும் முக்கியமானது என்பதை ஆய்வு காட்டுகிறது. இந்தத் திட்டங்கள் ஊட்டச்சத்து, ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் நீண்டகால விளைவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன என்றாலும், வருகைப் பதிவேட்டில் இத்தகைய திடீர் முன்னேற்றத்தை அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. 300-400 பள்ளிகள் மாணவர் வருகை 10 சதவீதத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. சில பள்ளிகளில் மாணவர் வருகை 200 சதவீதம் அதிகரித்துள்ளது" என்றார்.
தமிழ்நாட்டை பார்த்துதான், பிற மாநிலங்களும் 2000க்குப் பிறகு மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தின. அந்த வகையில் இத்திட்டத்தைத் தொடங்கி இந்தியாவுக்கே முன்னோடியாக இருப்பது தமிழ்நாடுதான்.