MK Stalin Vs BJP ADMK: “ஓனரை மிஞ்சிய லேபராக இருக்கிறார் பழனிசாமி“; பாஜக, அதிமுகவை பொளந்து கட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்
விருதுநகரில் பிரமாண்டமாக நடைபெற்ற திமுக இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் திமுக இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, எம்.பி. கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய பாஜக அரசு மற்றும் அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக மற்றும் அதன் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்தார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு புகழாரம்
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், அங்கு கூடியிருப்பவர்களை பார்க்கும்போது, மற்றவர்களுக்கு திமுக என்றால் பிரமாண்டம், அதிலும் இளைஞர் அணி என்றால் பிரமாண்டம், இன்னும் சொல்லப் போனால், உதயநிதி என்றால் அதைவிட பிரமாண்டம் என்று கூறினார்.
தமிழ் மொழியின் உயர்வுக்காக, தனித்துவமான தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக, இளைஞர்களை கொள்கைப் பிடிப்போடும், கழகப் பற்றோடும் துணை முதலமைச்சர் உதயநிதி வளர்த்தெடுப்பதாக கூறினார். உதயநிதியின் செயல்பாடுகளை தான் தொடர்ந்து உண்ணிப்பாக கவனித்து வருவதாகவும், பெயரளவிற்கு இளைஞர்களை அரசியலில் சேர்த்தால் போதும் என்று நினைக்காமல், நிர்வாகிகளை சிஸ்டமேட்டிக்காக, மாநில அளவில் தேர்ந்தெடுத்து, பயிற்சி கொடுத்து, புதிய தலைமுறை திராவிடர்களாக உருவாக்குவதாகவும் புகழாரம் சூட்டினார்.
“திராவிட மாடல் என்றால் காலை உணவுத் திட்டம் நினைவுக்கு வரும்“
விருதுநகர் என்றாலே நம் நினைவுக்கு வருவது கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் என்றும், அவர் பெயரைச் சொன்னாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது காலை உணவுத் திட்டம், அதேபோல் இன்று நமது திராவிட மாடல் என்று சொன்னால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது காலை உணவுத் திட்டம் என்று கூறினார்.
தமிழ்நாட்டிற்கு ‘0‘ கொடுத்த பாஜகவிற்கு வரும் தேர்தலில் ‘0‘ கொடுக்க வேண்டும்“
தொடர்ந்து, மத்திய அரசை விமர்சித்த அவர், மாநிலங்களின் அதிகாரங்களை மத்தியில் கொண்டுபோய் குவித்துக் கொண்டிருப்பதாகவும், மாநிலங்களை நகராட்சிபோல் ஆக்க வேண்டும் என்று துடியாய் துடிப்பதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், மாநில கட்சிகளே இருக்கக் கூடாது என்று பாஜக செயல்படுவதாகவும், ஆனால், அவர்களால் தொட முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்றும் தெரிவித்தார்.
எல்லா துறைகளிலும் முன்னேறி, அனைத்து ரேட்டிங்குகளிலும் Top-ல் வந்து, தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலமாக இருந்தாலும், பட்ஜெட் என்று வந்துவிட்டால், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எதுவும் கொடுப்பதில்லை என்று கூறினார். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், தேர்தலுக்காக ஏதேனும் ஸ்டண்ட் அடிப்பார்கள் என்று எதிர்பார்த்தால், அதுவும் இல்லை, வழக்கம்போல் ஈரத் துண்டுகள்தான் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு எது கேட்டாலும் கொடுக்காமல், ஜீரோவையே பாஜக அரசு கொடுப்பதாக கூறிய அவர், அவர்கள் கொடுத்த ஜீரோவை, தேர்தலில் அவர்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அவர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த என்டிஏ கூட்டணிக்கும் அதையே கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“ஓனரை மிஞ்சிய லேபர் எடப்பாடி பழனிசாமி“
தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு ஜீரோ சொன்ன மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்காமல், பாஜகவின் கிளைச் செயலாளராக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி என்று விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமி இப்போது முழுசாக என்டிஏ பழனிசாமியாக மாறியிருப்பதாகவும், நானும் ரவுடிதான் என்று சொல்வது போல், மைக் முன் நின்று, நான் தான் கூட்டணிக்கு தலைமை என்று சொல்கிறார், இல்லை புலம்புகிறார் என்று கூறினார்.
மேலும், இப்போது, 100 நாள் வேலை திட்டத்தை திமுக கெடுப்பதாகக் கூறி வித்தியாசமான போராட்டத்தை எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பதாக கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அந்த திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை தெரிந்துகொள்ளாமலேயே எடப்பாடி பழனிசாமி அதை ஆதரிப்பதாக குற்றம்சாட்டினார். ஏற்கனவே, 100 நாட்களில் 50 நாட்கள் கூட வேலை தராத மத்திய அரசு, எப்படி 125 நாட்கள் வேலை தரும் என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர், அதில் 40 சதவீத நிதியை மாநில அரசு தர வேண்டும் என்ற திருத்தத்தையும் தெரிந்துகொள்ளாமல், எடப்பாடி பழனிசாமி 150 நாட்கள் தருவதாக வாக்குறுதி அளித்து, ஓனரை மிஞ்சிய லேபராக அவர் இருப்பதாக விமர்சித்தார்.
வரும் தேர்தலில், தமிழ்நாட்டில் இதுவரை அடையாத மிகப் பெரும் தோல்வியை, பாஜக மற்றும் சுயநலத்திற்காக சுயமரியாதையை விற்று டெல்லிக்கு சேவகம் செய்யும் அடிமை அதிமுக அடையப் போவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.























