தஞ்சாவூரில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபின், அது குறித்த பதிவு ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தவெக ஆட்சி நடத்த தொந்தரவாக இருக்கப் போவதில்லை என கூறியுள்ளார். ஆனாலும், திமுக தொண்டர்களுக்கு ஒரு உத்தரவையும் அவர் போட்டுள்ளார். அது என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
மு.க. ஸ்டாலினின் பதிவு சொல்வது என்ன.?
மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “தஞ்சைத் தரணியில் அன்புச் சகோதரர் பூண்டி கலைவாணன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன். பூண்டி கிருஷ்ணசாமி அவர்கள், பூண்டி கலைச்செல்வன் அவர்கள் எனக் கழகத்துக்காகவே தம் வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட கழகக் குடும்ப விழா இது!“ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “சிறிய இடைவெளிக்குப் பிறகு, வெளியூர் வருகிறேன். நேற்று, திருச்சியில் இறங்கியது முதலே கழக உடன்பிறப்புகளும் மக்களும் என்னைக் கண்டதும் வெளிப்படுத்திய உணர்வினை நான் புரிந்துகொண்டேன். உங்களை நானறிவேன். என்னை நீங்கள் அறிவீர்கள். நமக்குள் வார்த்தைகள் தேவையில்லை.“ என்றும் அவர் கூறியுள்ளார்.
அதோடு, “ஒரு புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சி நடத்த நாம் தொந்தரவாக இருக்கப் போவதில்லை. நடத்தட்டும்!
ஆனால், இயலாமையை மறைக்க நம் மேல் அவதூறுகள் கொண்டு தாக்கினால் விளக்கம் அளிப்போம். சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினால் உண்மையைப் போட்டுடைப்போம் என உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன்.“ என தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைத்துள்ள தவெக
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதற்கு அடுத்தபடியாக, திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் பிடித்தன.
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்த ஒரு கட்சியும் அந்த எண்ணிக்கையை பெறாததால் சிக்கல் ஏற்பட்டது. இந்த சூழலில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகளின் ஆதரவுடன், தவெக ஆட்சி அமைத்துள்ளது.
இதனிடையே, தவெக-வை ஆட்சி அமைக்க விடக்கூடாது என்பதற்காக, திமுகவும் அதிமுகவும் இணைவதாக ஒரு செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு ஏற்றார்போல், தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதில் விசிக தொடர்ந்து இழுபறியை கடைபிடித்து வந்தது. பின்னர், இரவில் தான் தனது ஆதரவை உறுதி செய்தது.
இந்நிலையில், நேற்றைய பேட்டி ஒன்றில், அப்படி ஒரு பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தது பேசுபொருளானது. ஆனாலும், இன்று பேட்டியளித்த அவர், அதிகாரப்பூர்வமாக எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று மழுப்பியுள்ளார். இப்படிப்பட்ட சூழலில் தான், மு.க. ஸ்டாலின் இப்படி ஒரு பதிவை போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
