தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த நிலையில், அது வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. இந்நிலையில், முன்னதாக அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து திமுக போராட்டங்களை முன்னெடுத்தது. இதைத் தொடர்ந்து, தற்போது அந்த மசோதா தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த நிகழ்வு, நண்பர்கள் யார், துரோகிகள் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளதாக கூறியுள்ளார். வீடியோவில் அவர் வேறு என்னென்ன கூறியுள்ளார் என்பதை பார்க்கலாம்.
வீடியோவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளது என்ன.?
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், #Delimitation: நண்பர்கள் யார், துரோகிகள் யார் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது. புது வரலாறு படைத்துள்ள தி.மு.க.வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது! நமது வெற்றி தொடரட்டும்! #வெல்வோம்_ஒன்றாக!“ என்று கூறியுள்ளார். அதோடு, அவர் பேசிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
“ஒரு வருடத்திற்கு முன்பே தொடங்கிய வெற்றிக்கான பணி“
அதில், Delimitation என்ற கருப்பு சட்டத்திற்கு எதிரான நமது போராட்டம் வெள்ளி பெற்றுள்ளது என்று கூறியுள்ளார். இந்த ஆபத்தை ஒரு வருடத்திற்கு முன்பே அறிந்து, இந்த வெற்றியை பெறுவதற்கான எல்லா பணிகளையும் அப்போதே தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் தொடங்கி நேற்று முன்தினம் கருப்புக் கொடியேற்றி, கருப்பு சட்டத்தின் நகலை கொளுத்தியதாகவும், அதுவே, நேற்று திண்டுக்கல்லில் வெற்றிக்கார வெடியை கொளுத்தினேன், தீ பரவட்டும் என்று சொன்னேன், அது நாடாளுமன்றம் வரை பற்றிக்கொண்டது“ என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“50, 60-களில் பார்த்த பழைய திமுக-வை மீண்டும் பார்க்க நேரிடும் என்று கூறினேன், அப்படி என்றால் என்ன என்று கேட்ட சில அரைவேக்காடுகளுக்கு, இது தான் திமுக, பாருங்கள் என்று நேற்று ஸ்ட்ராங்காக காட்டியிருப்பதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
“மசோதாவை தோற்கடித்த அனைவருக்கும் நன்றி“
“தொகுதி மறுவரையறை என்ற பெயரில், முழுக்க முழுக்க பாஜகவிற்கு சாதகமாக கொண்டுவரப்பட்ட கருப்பு சட்டத்தை, நாடாளுமன்றத்தில் தோற்கடித்த எல்லோருக்கும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக என்னுடைய நன்றி நன்றி நன்றி“ என கூறியுள்ளார் மு.க. ஸ்டாலின்.
மேலும், “முழுக்க முழுக்க என்னுடன் நின்ற நம் தமிழ்நாட்டு மக்களுக்கு தான் என் நெஞ்சார்ந்த நன்றியை கூற வேண்டும்“ என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.
“சட்டத்தை தோற்கடித்த பெண்களுக்கு சல்யூட்“
அதோடு, பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற மாறுவேடத்தில் பாஜக இந்த சட்டத்தை கொண்டுவரப் பார்த்ததாகவும், ஆனால், இந்த ஏமாற்று திட்டத்தை முன்னின்று தோற்கடித்ததே பெண்கள் தான் என்றும், அவர்களுக்கு சல்யூட் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்னும் பல விளக்கங்களை அளித்து 6 நிமிடத்திற்கும் மேலான வீடியோவை வெளியிட்டுள்ள அவர், இறுதியில், “தமிழ்நாட்டு மக்களை நம் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப் பார்த்த பாஜகவிற்கும், அவர்களுடைய ஏவல் அடிமைகளான அதிமுகவிற்கும், 2026 சட்டமன்ற தேல்தலில் மறக்கமுடியாத மாபெரும் தோல்வியை கொடுப்போம், வெல்வோம் ஒன்றாக“ என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
