பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில், லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, நெருப்புடன் விளையாட வேண்டாம்  என எச்சரித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றையும் போட்டுள்ளார்.

Continues below advertisement

“நெருப்புடன் விளையாடாதீர்கள், தமிழ்நாடு முழு பலத்துடன் குரல் எழுப்பும்“

பீகாரில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், சிறப்பு தீவிர திருத்தம் ( #SIR ) தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பின்தங்கிய மற்றும் கருத்து வேறுபாடு கொண்ட சமூகங்களின் வாக்காளர்களை அமைதியாக அழிக்கவும், பாஜகவுக்கு ஆதரவாக சமநிலையை சாய்க்கவும் பயன்படுத்தப்படுகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இது சீர்திருத்தம் பற்றியது அல்ல, இது விளைவுகளைப் பற்றியது என்றும், பீகாரில் நடந்தது அனைத்தையும் கூறுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். டெல்லி ஆட்சிக்கு ஒரு காலத்தில் வாக்களித்த அதே வாக்காளர்கள், இப்போது மாற்றி வாக்களிப்பார்கள் என்பது தெரியும் என்பதால்தான், அவர்கள் வாக்களிப்பதை முற்றிலுமாக நிறுத்த முயற்சிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

Continues below advertisement

அதோடு, எங்களை தோற்கடிக்க முடியாவிட்டால், நீங்கள் எங்களை நீக்க முயற்சிக்கிறீர்கள். “நெருப்புடன் விளையாடாதீர்கள்“, நமது ஜனநாயகத்திற்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும் உறுதியான எதிர்ப்பை எதிர்கொள்ளும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

மேலும், இதற்கு எதிராக தமிழ்நாடு முழு பலத்துடன் குரல் எழுப்பும் என்று கூறியுள்ள அவர், இந்த அநீதியை நம்மிடம் உள்ள ஒவ்வொரு ஜனநாயக ஆயுதத்தையும் பயன்படுத்தி எதிர்த்துப் போராடுவோம் என தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பை நம்பும் ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், இது ஒரு மாநிலத்தைப் பற்றியது மட்டுமல்ல, இது நமது குடியரசின் அடித்தளத்தைப் பற்றியது எனவும், ஜனநாயகம் மக்களுக்கு சொந்தமானது. அது திருடப்படாது எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பதிவில் கூறியுள்ளார்.

இந்த பதிவிற்குக் கீழே, QUIT SIR, அதாவது, வாக்காளர்கள் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்தத்தை கைவிட வேண்டும் எனவும், அந்த வாசகம் அடங்கிய படத்தை பதிவிட்டுள்ளார்.