அரசியல், அரசு நிர்வாகம் என இரண்டிலும் மிக முக்கியமான பங்கை வகிப்பது களப்பணி. மக்களிடம் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதை முன்னிலைப்படுத்துவது அரசியல் தலைவரின் கடமை.

அதேபோல, தேர்தல் வெற்றிக்கு பிறகு, மக்களுக்கான திட்டங்கள் மேல் மட்டத்தில் வகுக்கப்பட்டாலும் அதை கடைகோடி மக்கள் வரை சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வது அரசு நிர்வாகத்தின் தலைவரின் கடமை. இந்த இரண்டுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்பவர் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின்.

கடும் உழைப்புக்கு மறுபெயர் ஸ்டாலின்:

கட்சியில் பகுதி பிரதிநிதியாகவும் அரசு நிர்வாகத்தில் சென்னையின் மேயராகவும் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய ஸ்டாலின்,  தற்போது கட்சியின் தலைவராகவும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் உயர்ந்திருப்பதற்கு முக்கிய காரணம் அவரின் கடும் உழைப்பு. அவர் செய்த களப்பணி.

கட்சியின் இளைஞரணி செயலராக ஸ்டாலின் மீது அரசியல் வெளிச்சம் பட தொடங்கியபோது, வாரிசு அரசியல் என்ற விமர்சனம் எழுந்தது. ஆனால், முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் மகன் என்பதால் மட்டுமே தான் இந்த இடத்திற்கு வரவில்லை என்பதை தன் கடுமையான உழைப்பின் மூலம் களப்பணி ஆற்றி விமர்சனங்களுக்கு பதில் அளித்தவர் ஸ்டாலின்.




 


சிறந்த நிர்வாகி:

14 வயதில் தொடங்கிய களப்பணி, 69 வயதிலும் தொடர்கிறது. கடந்த 1996 ஆம் ஆண்டு, சென்னை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சிங்கார சென்னை திட்டத்தின் மூலம் நகரை மேம்படுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டார் ஸ்டாலின். சென்னையின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு மேம்பாலங்கள் கட்டப்பட்டது ஸ்டாலின் மேயராக பொறுப்பு வகித்த காலத்தில்தான்.

பின்னர், 2006ஆம் ஆண்டு, திமுக ஆட்சி அமைத்த பிறகு, உள்ளாட்சிதுறை அமைச்சராக திறம்பட செயல்பட்டார். ஹெகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், அண்ணா கிராமப்புற மறுமலர்ச்சித் திட்டம் போன்றவை ஸ்டாலினுக்கு பெயர் வாங்கி தந்தது.

கடந்த 2021ஆம் ஆண்டு, முதலமைச்சராக பதவியேற்ற பிறகும் மழை, வெள்ளம் என எந்த பிரச்னை மக்களை நேரடியாக பாதித்தாலும் நேரடியாக களத்திற்கு சென்று, மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு கண்டு வருகிறார்.

இதுதொடர்பாக கேட்டபோது, "முதலமைச்சருக்கு சாட்டர்டே, சண்டே எல்லாம் கிடையாது. முதலமைச்சர் என்ற வகையில் நானே நேரடியாக ஆய்வு செய்யும் போது அதிகாரிகள் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பெறுவார்கள். அதன் மூலமாக திட்டங்களை வேகமாக நிறைவேற்றி முடிக்கலாம். அதனால் தான் கள ஆய்வுக்கு முக்கியத்துவம் தருகிறேன்" என ஸ்டாலின் சமீபத்தில் பதில் அளித்திருந்தார்.




 


 


பெண்கள் முன்னேற்றம்:


திமுக ஆட்சி காலத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. பெண்களுக்கு சொத்தில் சம பங்கு எனும் உரிமையை மாநில அரசின் அதிகாரத்துக்கு உள்பட்டு கடந்த 1989ஆம் ஆண்டு தனிச்சட்டமாக இயற்றியவர் கருணாநிதி. 




தந்தையின் வழியை பின்பற்றி பெண்களை பொருளாதார ரீதியாக முன்னேற்ற அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார் ஸ்டாலின். இது, சமூக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த திட்டத்திற்காக 2021-22 நிதியாண்டில், 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், 2022-23 நிதியாண்டில் 1,520 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 


6 முதல் 12 வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து முடித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகையை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்ததன் மூவம் திராவிட பாரம்பரியத்தின் வழித்தோன்றலாக தன்னை நிலைநிறுத்தி கொண்டார். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே, பெண்களுக்கு உயர் கல்வி அளித்தல், பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், வறுமையில் தவிக்கும் மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல் ஆகியவையாகும்.


பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான அடுத்த நகர்வாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.




சுற்றுச்சூழல்:


சமகாலத்தில், சுற்றுச்சூழல் என்பது முக்கிய விவகாரமாக உருவெடுத்துள்ளது. நாட்டிலேயே சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் தரும் கட்சியாக திமுக இருக்கிறது என்பதற்கு சான்று, ஆட்சிப் பொறுப்பேற்றதும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் பெயரை சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை என பெயர் மாற்றம் செய்ததுதான். 


ஆட்சியின் தொடக்க காலத்திலேயே, தனது அரசின் இலக்கு எதை நோக்கி இருக்கிறது, அதுசார்ந்து எடுக்க வேண்டிய முன்னெடுப்புகள் குறித்த தெளிவை ஸ்டாலின் உணர்த்திவிட்டார்.


மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம், மாநிலம் முழுவதும் கழிவு மேலாண்மையை மேம்படுத்த குடிமை அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல், சில அதிகாரிகள் தங்களின் பயன்பாட்டிற்காக இ-கார்களை வாங்கியது, சைக்கிள் ஓட்டுவதில் அவரது சொந்த ஆர்வம் என சுற்றுச்சூழல் விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஸ்டாலின்.


தமிழின பாதுகாவலன்:


நிர்வாகத்தில் எந்தளவுக்கு திறம்பட செயலாற்றுகிறாரோ, அதற்கு இணையாக தமிழினத்தின் தலைவராக, பாதுகாவலராக மக்களின் பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, அதை தீர்த்த வைக்க 24 மணி நேரமும் உழைத்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின். 


மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற தந்தையின் முழக்கத்திற்கு ஏற்ப கூட்டாட்சி தத்துவத்திற்காகவும் மாநில உரிமைகளுக்காகவும் இந்தி திணிப்புக்கு எதிராகவும் மக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்த பிரச்னைகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை தனது களப்பணி மூலம் மக்களிடம் உணர்த்தி வருகிறார்.




இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தியது, கேரளாவில் கூட்டாட்சி தத்துவம் மற்றும் மத்திய - மாநில உறவுகள் தொடர்பான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தரங்கில் பங்கேற்றது, நீட் விவகாரத்தில் சட்ட போராட்டம் மேற்கொண்டு வருவது என நாலா புறமும் பம்பரம் போல் சுழன்று கொண்டிருக்கிறார்.


இப்படி, அனைத்து முனைகளிலும் இந்தியாவுக்கே வழிகாட்டி கொண்டிருக்கும் ஸ்டாலின், வரலாற்றில் ஏற்கனவே தடம் பதித்துவிட்டார். சமகாலம் மட்டும் இன்றி வரலாற்றின் நாயகனாகவும் தன்னை நிலைநிறுத்திவிட்டார்.